''வேகமாக நடந்தால் மூச்சு வாங்குது...'' கரோனாவின் தாக்கம் பற்றி மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்!

Former Minister Vijayabaskar recovering from Corona

கடந்த ஆண்டு கரோனா காலத்தில் பரபரப்பாக சுற்றி வந்த மாஜி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலைத் தொகுதியில் இன்னும் வேகமாக சுற்றி சுழன்று தேர்தலை சந்தித்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி மறுநாள் மதியம் வரை எண்ணிக்கை தொடர்ந்து, இறுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் விராலிமலைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த சில நாட்களில் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகு அனைத்துக்கட்சி ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றார். ஆனால் அவருக்கு கரோனா சரியானாலும், உடலில் அதன் தாக்கம் இருப்பதால் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டார்.அவரது ஆதரவாளர்கள் அடிக்கடி நலம் விசாரிக்கத் தொடங்கியபோது, இருமலும் தொடர்ந்ததால் அவசியமாக பேசவேண்டியவர்களிடம் பேசிவிட்டு செல்போனை ஆஃப் செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில், புதன் கிழமை அன்னவாசல் பகுதியில் உள்ள சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தனது சொந்தசெலவில் கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது அங்கு வராத சிலருக்கான பொருள் வழங்கிவிட்டு 'அமைச்சர் கொடுத்தேன்னு சொல்லுங்க என்று சொன்னவர்.. இல்ல இல்ல எம்.எல்.ஏ கொடுத்தேன்னு சொல்லுங்க' என்று கூறினார்.

சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏவைப் பார்த்த பல பெண்கள் கண்கள் கலங்க நலம் விசாரித்தனர். இப்ப நான் நல்லா இருக்கிறேன். முதல்ல கொஞ்சம் அசதியா இருந்தது, இப்ப எல்லாம் சரியாகிடுச்சு. ஆனால் வேகமா நடந்தால் மூச்சு வாங்குது. வேற ஒன்றும் இல்லை. நீங்க எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கனும் என்று அவர்களிடம்கூறினார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, ''கரோனா தடுப்பூசி போடுவதை இன்னும் கிராமங்கள் வரை விரிவு செய்ய வேண்டும். கருப்பு பூஞ்சைக்கு சென்னையில் சிகிச்சை மையம் தொடங்கியுள்ளது போல மண்டலவாரியாக சிகிச்சை மையம் தொடங்க வேண்டும். மேலும், முகக்கவசம் ஆயுதம் என்றால் தடுப்பூசி பேராயுதம். அதனால் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்'' என்றார்.

corona virus Pudukottai vijayabaskar
இதையும் படியுங்கள்
Subscribe