
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 76.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை திடீரென்று திரும்பப் பெற்றுக்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் சரோஜா. முந்தைய அதிமுக ஆட்சியின்போது சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சராக இருந்தார். இவர், தனது துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 15 பேரிடமிருந்து 76.50 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு, மோசடி செய்துவிட்டதாக அவருடைய முன்னாள் உதவியாளரும், உறவினருமான குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் சரோஜா, அவருடைய கணவர் மருத்துவர் லோகரஞ்சன் ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதையடுத்து, சரோஜாவும் அவருடைய கணவரும் தலைமறைவாகினர்.
இதற்கிடையே, அவர்கள் இருவரும் முன்ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு, ஏற்கனவே இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது முறையாக நவ. 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக இருந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை (நவ. 15) காலையில் சரோஜாவின் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி, முன்ஜாமீன் மனுவைத் திரும்பப் பெறுவதாக கூறினார். அதற்கு நீதிபதியும் அனுமதி அளித்ததை அடுத்து, முன்ஜாமின் மனுவை திரும்பப் பெற்றனர்.
இதையடுத்து, தலைமறைவாக உள்ள சரோஜா மற்றும் அவருடைய கணவர் ஆகிய இருவரையும் நாமக்கல் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அவர்கள் இருவரும் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.