Former minister Saroja should not be arrested till November 24 - Chennai High Court

Advertisment

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் சரோஜா. முந்தைய அதிமுக ஆட்சியின்போது சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சராக இருந்தார். இவர், தனது துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 15 பேரிடமிருந்து 76.50 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு, மோசடி செய்துவிட்டதாக அவருடைய முன்னாள் உதவியாளரும், உறவினருமான குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் சரோஜா, அவருடைய கணவர் மருத்துவர் லோகரஞ்சன் ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யக்கூடும் என சரோஜாவும் அவருடைய கணவரும்முன்ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு, ஏற்கனவே இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது முறையாக கடந்த நவ. 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக இருந்தது. ஆனால், நவம்பர் 15ஆம் தேதி காலை சரோஜா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி, முன்ஜாமீன் மனுவைத் திரும்பப் பெறுவதாக கூறினார். அதற்கு நீதிபதியும் அனுமதி அளித்ததை அடுத்து, முன்ஜாமின் மனுவை திரும்பப் பெற்றனர்.

அதனையடுத்து, சரோஜாவும் அவரது கணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதில், ‘வேலை வாங்கித் தருவதாக கூறி யாரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபடவில்லை. புகார் அளித்துள்ள குணசீலன் எங்களது உறவினர்தான். குடும்ப பகை காரணமாக பொய்ப் புகார் அளித்துள்ளார். சத்துணவு அமைப்பாளர்களைத் தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள்தான் நியமிக்கின்றனர். இந்தப் புகார் தொடர்பாக ராசிபுரம் போலீசார் ஏற்கெனவே தங்களிடம் விசாரித்துள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

Advertisment

இந்த மனு, நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு நேற்று (19ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, இதுதொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

அதையடுத்து நீதிபதி எம். நிர்மல்குமார், வழக்கு விசாரணையை நவ. 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார். மேலும், நவ. 24ஆம் தேதி வரை சரோஜாவுக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.