
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 76.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் சரோஜா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நவ. 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் குணசீலன் (65). கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் நெருக்கமான உறவினர் ஆவார்.
இவர், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் சரோஜா மீது ஒரு புகார் அளித்திருந்தார். அதில், சத்துணவுத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 15 பேரிடமிருந்து 76.50 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு, சரோஜாவும், அவருடைய கணவர் மருத்துவர் லோகரஞ்சனும் மோசடி செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை விசாரித்த மாவட்டக் குற்றப்பிரிவினர், அவர்கள் இருவர் மீதும் நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, கணவன், மனைவி இருவரும் திடீரென்று தலைமறைவாகினார். இதற்கிடையே, அவர்கள் முன்ஜாமீன் கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
ஏற்கனவே இந்த மனு, நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நவ. 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இந்த மனு, புதன்கிழமை (நவ. 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சரோஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் சென்னையில் உள்ளதாலும், கனமழையால் அவரால் வர இயலாத காரணத்தால் மனுவை விசாரிக்க அவகாசம் வேண்டும் என்றும் கோரினார். இதையடுத்து, சரோஜா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நவ. 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.