Skip to main content

சசிகலா விவகாரம்: சேலத்தில் ஈ.பி.எஸ். ஆலோசனை; தேனியில் ஓ.பி.எஸை சந்தித்த முன்னாள் அமைச்சர் - பரபரக்கும் அதிமுக வட்டாரம்

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

rb udhayakumar

 

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் நேற்று தன்னுடைய பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்  நடத்தினார். மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்கவேண்டும் என்று சில நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இத்தகவல் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியும் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் அதே கருத்தை வெளிப்படுத்தினார்.

 

சேலத்தில் செம்மலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தேனி பெரியகுளத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்தார். இது வழக்கமான சந்திப்புதான் என ஆர்.பி.உதயகுமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் சூழலில் நடைபெற்றுள்ளதால் இந்தச் சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் நிலவும் பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்