Former minister MR Vijayabaskar arrested; Excitement in Karur!

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்டபதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று (22/10/2021) நடைபெற்றது. இதில் பெரும்பாலான மாவட்டங்களில் தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

Advertisment

இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்களாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த 8 பேர் உள்ளனர். அதேபோல், மாவட்ட கவுன்சிலர்களாக தி.மு.க.வைச் சேர்ந்த 4 பேர் உள்ளனர். இச்சூழலில் கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த வேட்பாளர்கள், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். அதேபோல், இரு கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்களும் வாக்களிப்பதற்காக வந்தனர்.

Advertisment

இந்நிலையில், இன்று (22/10/2021) மதியம் 02.30 மணிக்கு அங்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் ஒத்திவைப்பதாகக் கூறிவிட்டு, காரில் புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டு, தேர்தல் ஒத்திவைப்பதற்குக் காரணம் என்ன? கூறுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கவுன்சிலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 500- க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

அ.தி.மு.க. மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக, ஆளுங்கட்சித் தூண்டுதலின் பேரில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த கைதின் போது, காவல்துறையினர் அ.தி.மு.க.வினரைத் தாக்கி வலுக்கட்டாயமாக வேனுக்குள் ஏற்றினர். அங்கிருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "ஏன் அடிக்கிறீங்க, எதற்கு அடிக்கிறீங்க" என்று காவல்துறையினரிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.