
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவந்தனர். இந்தப் புகார் தொடர்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின் மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 7ஆம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகை கடந்த 25 ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்தப் புகாரில் ஏற்கனவே மணிகண்டன் மீது 2 வழக்குகள் இருந்த நிலையில், 342, 352 ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்த்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி 4 ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.