ADVERTISEMENT

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! 

08:55 PM Jun 20, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த மணிகண்டன் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் மீது காவல்நிலையத்தில் துணை நடிகை புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

ADVERTISEMENT

தனிப்படை காவல்துறையினர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மணிகண்டனைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பெங்களூரு பண்ணை வீட்டில் இருந்த மணிகண்டனை தனிப்படை காவல்துறையினர் இன்று (20/06/2021) அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர், அவரை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனை செய்தனர். அதைத் தொடர்ந்து, அடையாறு மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டனிடம் இரண்டு மணி நேரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மணிகண்டன் தலைமறைவாக இருக்க உதவியதாக கைதான பிரவீன், இளங்கோ ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் நீதிபதி முன் மணிகண்டனை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, இருவரும் விருப்பத்துடன் பழகியுள்ளதால் பாலியல் வன்கொடுமையாக எடுத்துக் கொள்ள முடியாது. சட்டப்பிரிவு 376-இன் கீழ் பதிவு செய்த வழக்கை வேறு பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டார். மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT