/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2422.jpg)
முன்னாள் காவல்துறை ஐ.ஜியும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாகப் பணி செய்தவருமான பொன்மாணிக்கவேல் திண்டிவனம் மாவட்டம், ஒலக்கூர் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “அதே ஒலக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கி.பி 9ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் பேரன், இரண்டாம் ராஜேந்திர சோழன் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.
மிகவும் பழமையான இந்தக் கோயிலில் ஐந்து கற்சிலைகள் கோவில் பயன்பாட்டில் ஏற்கனவே இருந்து வந்துள்ளன. அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலின் பாதுகாப்புகருதி அந்த ஐந்து சிலைகளையும் வேறு இடத்திற்கு மாற்றி உள்ளனர். ஆனால், இன்றுவரை அந்த 5 சிலைகளையும் மீண்டும் இந்த ஆலயத்தில் ஒப்படைக்கப்படவில்லை. இதில் ஒரு சில சிற்பங்கள் மும்பை வழியாக அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டுள்ளதாகவும், அதனை சுமார் ரூ.70 லட்சம் வரை விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இக்கோயிலின் வடக்கு, கிழக்கு, தெற்குக் கோபுரங்ககளில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அவை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனையும் அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் கோயிலின் தொன்மை பற்றி அறியாமலும், வருங்காலச் சந்ததிகள் கோயில் பழமை குறித்து தெரிந்துகொள்வதற்கு இயலாத அளவில் கோவிலின் நிலைப்பாடு இருந்து வருகிறது. இதன் மதிப்பை அறநிலையத்துறை அதிகாரிகள் உணரவில்லை. ஒலக்கூர் கிராம மக்கள் பராமரிப்பு செய்யாவிட்டால் சோழர் காலத்தில் கட்டப்பட்ட அகஸ்தீஸ்வரர் கோயில் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போயிருக்கும். எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும்” என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சிலை கடத்தல் சம்பந்தமாக காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் அளித்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)