Former DGP ravindranath son arrested in  cannabis trafficking case

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேசமயம் போதைப் பொருள் புழக்கத்தைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்துக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போதைப் பொருள் விற்கப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் சென்னை நந்தம்பாக்கம் சென்ற தனிப்படை போலீசார், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜான் எஸி, மெக்கலன் மற்றும் அருண் ஆகியோரை போதைப் பொருள் கடத்தை வழக்கில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான அருண் முன்னாள் டி.ஜி.பி ரவிந்தரநாத் என்பவரது மகன் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது

பின்னர், அவர்களிடம் இருந்து, 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன், ரூ. 1 லட்சம் ரொக்கம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து மூன்று பேரிடமிருந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை அரசும், காவல் துறை எடுத்துவரும் சூழலில் முன்னாள் டிஜிபியின் மகனே போதைப் பொருள் கடத்தை வழக்கில் கைதாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.