Skip to main content

முன்னாள் டி.ஜி.பி. மீதான பாலியல் புகார்; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Former DGP  Case hearing adjourned on viluppuram court

 

பெண் எஸ்.பி.க்கு, முன்னாள் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில், அவருக்கு உறுதுணையாகச் செயல்பட்டதாக அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

 

கடந்த 2ஆம் தேதி இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது எஸ்.பி. கண்ணன் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அவரது வழக்கறிஞர் மூலம் மனுத் தாக்கல் செய்ததோடு இது சம்பந்தமாகக் கூடுதல் ஆவணங்களைக் கேட்டும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து நேற்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், எஸ்.பி. கண்ணனை வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது என்று தங்கள் வழக்கறிஞர் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் டி.ஜி.பி., எஸ்.பி, கண்ணன் ஆகிய இருவரும் நேரில் ஆஜரானார்கள். அப்போது முன்னாள் டி.ஜி.பி. தரப்பில் இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்ற அதிகார வரம்புக்குள் வராது என்று மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீது விசாரணை நடந்தது. 

 

அப்போது, இந்த மனு மீது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன் பதில் மனுத் தாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளது எனச் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தார். டி.ஜி.பி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்றம் உத்தரவு நகலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டார். மேலும், அது வழக்கில் வாதாட எங்களுக்கு ஏதுவாக இருக்கும் என்றும் கூறினார். அப்போது அரசு வழக்கறிஞர், அடுத்த வாய்தாவின் போது உயர் நீதிமன்ற உத்தரவு நகலைச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார். 

 

இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். பெண் எஸ்.பி. தொடுத்த இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்