Former Congress MLA Velthurai withdraws his petition ..!

சேரன்மகாதேவியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பெற்ற ஊதியதொகை 21 லட்சத்தைத்திருப்பி செலுத்தப்பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரை வாபஸ் பெற்றார்.

Advertisment

கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரையின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேல்துரையின் வெற்றியை செல்லாது என அறிவித்துத்தீர்ப்பளித்தது.

Advertisment

அரசின் பதிவுபெற்ற ஒப்பந்ததாரராக இருந்ததால் அவரது தேர்தலை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2006 முதல் 2011 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பெற்ற ஊதியதொகை 21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயைத்திருப்பி செலுத்தும்படி, சட்டமன்ற செயலாளர், வேல்துரைக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்துத்தாக்கல் செய்த வழக்கைத்தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஊதியத்தைத்திருப்பிச் செலுத்த உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஊதியத்தைத்திருப்பிச் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஊதிய தொகையை திருப்பி செலுத்துவது தொடர்பாக மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்ததையடுத்து வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக வேல்துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, வழக்கை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.