Advertisment

சம்பளத்தை பாக்கி வைக்காதீங்க... முதல்வர் எடப்பாடிக்கு கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ கடிதம்

"ஊரக வளர்ச்சித்துறை - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும்" என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளருமான தோழர் நா.பெரியசாமி. மேலும் அவர் நம்மிடம் கூறுகையில்,

Advertisment

"கிராமப் பகுதிகளில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களின், குறிப்பாக உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்றிருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மட்டுமே வாழ்வாதாரம் வழங்கி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வழியில்லாமல் மக்கள் அன்றாடப் பிரச்சினைகள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் பல்வேறு தவறுகளும், முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

erode

இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, கடந்த 1.4.19 முதல் நாள் ஒன்றுக்கு இருநூற்றி இருபத்தி ஒன்பது ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் இந்த ஊதியம் வழங்குவதில்லை. மிகக் குறைந்த ஊதியம் ரூபாய் 100 முதல் 180 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

Advertisment

இந்த ஊதியமும் மூன்று மாதங்கள், சில பகுதிகளில் இதைவிடக் கூடுதலான காலம் கொடுக்கப்படாமல் ஊதிய நிலுவைத் தொகை தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இது சட்டவிரோத செயலாகும் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியும் என நினைக்கிறேன். . மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் படி ஊதியப் பாக்கி 15 நாட்களைத் தாண்டுமானால் ரூபாய் 1000/=க்கு ரூபாய் 50 வீதம் அபராதம் சேர்த்து வழங்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது. இதனை உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மதிப்பதில்லை.

குறிப்பாக ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்ட மன்ற தொகுதியில் ஊதியப் பாக்கித் தொகை வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் நேரடி நடிவடிக்கைக்கு செல்லும் நிலையில், அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண உறுதி அளித்துள்ளனர். இதன் மீது தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் மீது முதல்வர் பழனிச்சாமி நேரடியாக தலையிட்டு அதிகாரிகள் அளித்த உறுதி மொழி காலத்தில் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள கணக்கன்காடு ஊராட்சியில் கடந்த ஒரு வருடமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்கவில்லை என்று தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தக்க விசாரணை நடத்தி, தவறுகள் திருத்தப்பட வேண்டும். தவறுகளுக்கு காரணமான அலுவலர்கள் மீது துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் இதே விபரங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதமாக அனுப்பியிருக்கிறார்.

cpm admk edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe