/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madras33_19.jpg)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையைக் கைவிட்டு, வீட்டுச் சாவியைத் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபக் தொடர்ந்த வழக்கை, நீதிபதி கிருபாகரன் அமர்வில், நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து பட்டியலிடும்படி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணைகளைக் கைவிட்டு, வீட்டுச் சாவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், வேதா நிலையம் வீடு, எனது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அந்த இல்லத்தைக் கோயில் போல பயன்படுத்திய எனது அத்தை ஜெயலலிதா, முக்கியக் குடும்ப நிகழ்ச்சிகளை தனது வீட்டிலேயே நடத்தினார்.
தனது இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என எந்தக் கட்டத்திலும் ஜெயலலிதா தெரிவித்ததில்லை. தமிழக அரசு, அவரது இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுசம்பந்தமான என்னுடைய ஆட்சேபங்களையும், எனது சகோதரி தீபாவின் ஆட்சேபங்களையும் அரசு பரிசீலிக்கவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள எங்களின் கருத்துகளைத் தெரிவிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல், கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2013- ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், பொதுப் பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது பொதுப் பயன்பாடு அல்ல.
வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீஸ்களை ரத்து செய்ய வேண்டும். அதற்குத் தடை விதிக்க வேண்டும். வேதா நிலையத்தின் சாவியை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து 2017- இல் அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து தீபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவர் தரப்பு கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிக்க, அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், 2017 முதல் 2020-ஆம் ஆண்டு வரை, இதுவரையிலும் தீபக் தரப்பு கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கவில்லை என வாதிட்டார்.
ஊரடங்கு நேரத்தில் கையகப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதாகவும், தன்னையும், சகோதரியையும் சட்டப்பூர்வ வாரிசாக அறிவித்த உயர்நீதிமன்றம், நினைவில்லம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. சட்டப்பூர்வ வாரிசுகள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை முதலில் இருந்து புதிதாகத் துவங்க வேண்டும் எனத் தீபக் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தீபக் தரப்பு கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறுவது தவறு. 2018- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பொது விசாரணையில் அவர்கள் தெரிவித்த ஆட்சேபம் கருத்தில் கொள்ளப்பட்டு, மே 7- ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தார். தற்போது இழப்பீடு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது, இதில் தீபா, தீபக் மற்றும் 36 கோடி ரூபாய் வரி பாக்கிக்காக வருமான வரித்துறையும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரரையும் அவரது சகோதரியையும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவித்த உயர்நீதிமன்றம், அறக்கட்டளை அமைத்து 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கும், இரு நீதிபதிகள் அமர்வில் உள்ள வழக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால், இந்த வழக்கையும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்புவதே சரியாக இருக்கும். இருவேறு தீர்ப்புகள் வருவதைத் தவிர்க்க இந்த வழக்கை, இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01.gif)