Advertisment

தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா?- எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை!

former chief minister of tamilnadu edappadi palaniswami statement

Advertisment

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (24/07/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது, தனியாரை நுழைய அனுமதித்து லாட்டரி சீட்டு திட்டத்தையும் சீரழித்தார். அப்போதுதான் வெளி மாநில லாட்டரிகள் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டது.

ஒரு சீட்டின் விலை 10 ரூபாய் என்றும், பரிசு ஒரு கோடி ரூபாய் என்றும் மக்களிடையேப் பேராசைத் தூண்டப்பட்டது. ஒரு ரூபாய்க்கு ஒரு லட்சம், மாதம் ஒரு முறை குலுக்கல் என்ற நிலை மாறி, ஒரு நம்பர் லாட்டரி முதல் பல கோடி ரூபாய் வரை பரிசு என்று ஒரு நாளைக்கு குறைந்தது 50 விதமான லாட்டரிகள் விற்பனை தமிழகத்தில் நடைபெற்றது.

இதன் காரணமாக, குதிரை ரேஸ், சீட்டாட்டம் போல் லாட்டரி சீட்டு தமிழகத்தில் மாபெரும் சூதாட்டமாக மாறியது. தனியார் லாட்டரி ஏஜெண்டுகள், வெளி மாநில லாட்டரி சீட்டுகளை, கள்ள நோட்டு அச்சடிப்பது போல் அச்சிட்டு மக்களிடம் விற்றார்கள்.

Advertisment

உடனடியாக கோடீஸ்வரர்கள் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பிய அப்பாவி ஏழை, எளிய மக்கள், லாட்டரி மயக்கத்தில் தங்கள் குடும்பத்தையும், வாழ்வையும் இழந்தார்கள். இந்தத் தீமை, சமுதாயத்தில் புரையோடிப் போய் பல ஆண்டுகள் நம் மக்களைச் சீரழித்து, பல்வேறு காலக்கட்டங்களில் தனியார் லாட்டரியால் பணம் இழந்த பல அப்பாவிகள் தற்கொலை செய்துக் கொண்ட அவலமும் நிகழ்ந்தது.

ஜெயலலிதா இரண்டாவது முறையாக கடந்த 2001- ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தப் பின், லாட்டரி கொள்ளையரின் பிடியில் இருந்து மக்களைக் காக்க முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த 2003- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு கொள்கை முடிவு எடுத்து, ஒரே கையெழுத்தில், ஒரே இரவில் லாட்டரி சீட்டை தமிழகத்தில் ஒழித்த பெருமை ஜெயலலிதாவையே சாரும். இந்தச் சட்டத்திற்கு எதிராக லாட்டரி கொள்ளையர்கள் உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில், ஏழை, எளிய மக்கள், பல ஆண்டுகளாக லாட்டரி அரக்கனின் பிடியில் இருந்து தப்பி நல்வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், மக்களின் தலையில் மண்ணை வாரிக்கொட்ட, சந்தர்ப்பவசத்தால் தற்போது பதவியில் அமர்ந்துள்ள தி.மு.க.வின் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வருகின்றன.

ஆட்சிக்கு வருவதற்கு முன், அரசுக்கு வருவாயைப் பெருக்கும் வழி எங்களுக்குத் தெரியும் என்று கொக்கரித்த இவர்கள், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தனியார் லாட்டரி ஏஜெண்ட்டுகள் கொள்ளை அடிக்கவும், அதன் மூலம் ஆட்சியாளர்கள் பெருத்த ஆதாயம் பெறுவதற்குமான, இந்த அதிகாரப்பூர்வ லாட்டரி சீட்டு திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். அரசின் வருவாயைப் பெருக்க வேறு பல நல்ல வழிகளைத் தேட வேண்டும்.

தமிழகத்தின் ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற, ஜெயலலிதா ஒழித்த லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டு வந்தால், தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும். எனவே, லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டுவர முயற்சிக்க வேண்டாம் என்று கட்சியின் சார்பில் எச்சரிக்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

statement edappadi pazhaniswamy admk Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe