/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cv-shan.jpg)
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் பரபரப்பாக வேட்புமனுத் தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தநிலையில் நேற்று சென்னையில் இருந்து தனது சொந்த மாவட்டமான சேலம் நோக்கி பயணம் செய்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது விழுப்புரம் அருகே வந்தவுடன் திடீரென அவரது கார் விழுப்புரம் அதிமுக அலுவலகத்திற்கு முன் சென்று நின்றது. அதிலிருந்து இறங்கி எடப்பாடியார் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அவரது வருகை அறிந்த முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் பூங்கொத்து கொடுத்து எடப்பாடியை வரவேற்றார். அதன் பிறகு பழனிச்சாமி, சண்முகம் இருவரும் கட்சியினருடன் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பணிகள் எப்படி நடைபெறுகிறது? தேர்தல் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்? தேர்தல் பணிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
வெற்றிப் பெறுவதற்கு கட்சித் தொண்டர்கள் எப்படிப்பட்ட பணிகளை செய்ய வேண்டும்? அதிமுக நகராட்சி மாநகராட்சி பேரூராட்சிகளை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கான தேர்தல் பணிகளை விரைந்து செய்வது குறித்து நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார்கள். அதன் பிறகு மதியம் 2 மணி அளவில் எடப்பாடியாரின் கார் சேலம் நோக்கி புறப்பட்டது. எடப்பாடி அதிமுக கட்சி அலுவலகத்திற்கு திடீர் விசிட் செய்து கட்சியினருடன் ஆலோசனை செய்தது கட்சியினர், தொண்டர்கள், பொறுப்பாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)