ADVERTISEMENT

ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தது உயர்நீதிமன்றம்!  

12:53 PM May 27, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பதற்கு நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ADVERTISEMENT


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடைய, 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில், ஜெயலலிதாவின் உறவினர்களான ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டு, அவர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். மேலும் வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல்குத்தூஸ் அமர்வு, கடந்த ஆகஸ்ட் 30- ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்குகள் தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல்குத்தூஸ் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றிக் கொள்ள நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். போயஸ் கார்டன் இல்லத்தை தமிழக முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லமாக மாற்றலாம்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா சொத்துகளின் மீது ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு உரிமை உண்டு. ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு வழங்க ஜெ.சொத்துகளின் ஒன்றை விற்று வங்கியில் டெபாசிட் செய்து பயன்படுத்தலாம். ஜெயலலிதாவின் சொத்துகளில் ஒரு பகுதியை அறக்கட்டளையாக மாற்றவும் நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். பரிந்துரை பற்றி 8 வாரத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல்குத்தூஸ் உத்தரவிட்டுள்ளனர்.


ஜெயலலிதாவின் ரூபாய் 913 கோடி சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த அ.தி.மு.க.வின் புகழேந்தி, ஜானகிராமனின் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT