
சக்தி மசாலா நிறுவனங்களின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் 22-வது ஐம்பெரும் விழா ஈரோடு சக்தி துரைசாமி திருமண மகாலில் 10ந் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர் முத்துலட்சுமி விஸ்வநாதன் மற்றும் ஜெயா பழனிவேலு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் முனைவர் பி.சி துரைசாமி தலைமை வகித்து பேசினார். இந்திய புலனாய்வுத்துறை முன்னாள் (சி.பி.ஐ) இயக்குநர் டாக்டர் டி.ஆர். கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மேலும் மருத்துவத் துறையில் சிறப்பாக சேவை புரிந்துவரும் கோவை காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பி.ஜி. விஸ்வநாதன் மற்றும் கோவை ஜீரண மண்டல மருத்துவர் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். சி. பழனிவேலு ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார். சக்திதேவி அறக்கட்டளையின் ‘தளிர்’திட்டம் மூலம் மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்று சிறப்பாக பராமரித்து வளர்த்து வந்த தனிநபர்கள், நிறுவனங்களுக்கு மரங்களின் காவலர் விருதினையும், சக்திதேவி அறக்கட்டளையின் ஆண்டு மலரையும் வெளியிட்டு சேவை அமைப்புகளுக்கு நிதி உதவி, உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, 2020-21-ஆம் கல்வி ஆண்டின்; 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்று முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
சக்தி மருத்துவமனை மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி அவர் பேசும்போது, “சக்தி மசாலா நிறுவனத்தினர் கிராமப்புறத்தில் இருந்து வந்து இவ்வளவு வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்களின் கடின உழைப்பு, நாணயம், நம்பிக்கை. அதே சமயத்தில் பணிவு, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை. அதேபோல், டாக்டர் விஸ்வநாதன், டாக்டர் பழனிவேலு அவர்களும் கிராமப்புறங்களிலிருந்து வந்து பல்வேறு வளர்ச்சி அடைந்து உள்ளனர். கூட்டுக் குடும்பம் இருந்தால் அன்பு, பாசம், பொறுமை இது எல்லாம் கிடைக்கும். சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ் சேவை மூலம் பல உயிர்கள் தினசரி காப்பாற்றப்படும். இதன் ஆசி, அவர்களின் குடும்பத்திற்கு வந்து சேரும்” என்றார்.
பாரதி வித்யா பவன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர் எல்.எம். ராமகிருஷ்ணன், அரிமா இயக்கத்தின் முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவர். என். முத்துசாமி, மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற சித்தோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.ரத்தினசபாபதியை பாராட்டி நினைவுப் பரிசுகளையும், வழிகாட்டி திட்டம் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி, வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மலை பகுதியான நீலகிரி மாவட்ட மக்களின் நலனுக்காக, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு 2 டயாலிஸ் இயந்திரம் வாங்க ரூபாய் 13 லட்சத்து 88 ஆயிரத்து 817 ரூபாய் மற்றும் 2020–21 ம் கல்வி ஆண்டில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் முதல், இரண்டாம் இடம்பெற்ற 150 மாணவ , மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை, பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்கல்வி படிக்கும் 505 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை என மொத்தம் 1 கோடியே 20 ஆயிரத்து 567 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் நிர்வாக இயக்குநரான டாக்டர் சாந்தி துரைசாமி, செந்தில்குமார், தீபா செந்தில்குமார், எம்.இளங்கோ,. சக்திதேவி இளங்கோ, ஜி.வேணுகோபால், முக்கிய பிரமுகர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.