கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் ராமர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதே சமயம் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கச்சிராபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இத்தகைய சூழலில் கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியான மாதேஷ் நண்பர்களான பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மீன் வியாபாரி கண்னன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில் மாதேஷுக்கு மெத்தனால் கடத்த உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதன் என்பவர் உயிரிழந்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.