/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/F_Dn2gaaYAET14w_35.jpg)
கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து,தனிக்குழு அமைத்து அந்தச்சிறுத்தையின் நடமாட்டத்தைத்தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும்காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/F_Dn2gaaYAET14w_36.jpg)
ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/F-_YLwQXsAAGxA1_37.jpg)
இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டியகிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத்தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்றுகடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத்தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப்பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போதுஅந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறுசில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow Us