ADVERTISEMENT

ரிமோட் கார் மூலம் சிறுத்தையை சீண்டிய வனத்துறை... கூடிய மக்கள் கூட்டம்!

12:10 PM Apr 15, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே, வீட்டுக்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில், சிறுமி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த பிரேமா, மனோகரன், சிறுமி மகாலட்சுமி ஆகியோர் குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், எர்தாங்கலை அடுத்த கலர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வரும் நிலையில், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டுக்கு வெளியே மிருகம் ஒன்று உறுமும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த சிறுத்தையைக் கண்டு பிரேமா கூச்சலிட, தூங்கிக்கொண்டிருந்த மனோகரன், சிறுமி மஹாலட்சுமி ஆகியோரும் வெளியே வந்துள்ளனர். அப்பொழுது மூவரையும் சிறுத்தை தாக்கியது.

சிறுத்தை தாக்கியதில் மூவரும் படுகாயமடைந்த நிலையில், வீட்டிற்குள் சிறுத்தை புகுந்தது. இதனை சுதாகரித்துக்கொண்ட மூவரும் சிறுத்தையை வீட்டிற்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டிற்குள் சிக்கியிருக்கும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. சிறுத்தையை இரவில் பிடிக்க முடியாது என்ற காரணத்தால், இரவு முதல் கண்காணித்து வந்தனர். சிறுத்தை வீட்டிற்குள் உள்ள அறையில் பதுங்கியதால், ரிமோட் கார்களை உள்ளே அனுப்பி சிறுத்தையை வெளியே கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது.

அதேபோல் ட்ரில்லிங் இயந்திரத்தைக் கொண்டு சுவற்றில் துளையிட்டு சத்தம் எழுப்பி, சிறுத்தையைக் குறிப்பிட்ட அறையில் இருந்து வெளியே கொண்டுவர வனத்துறை சார்பில் தொல்லை கொடுக்கப்பட்டது. இறுதியாக வெளியே வந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. வீட்டில் சிறுத்தை புகுந்த சம்பவம் அக்கம்பக்கத்தில் தெரியவர, சிறுத்தையைக் காண மக்கள் கூட்டம் கூடியது. ஒருவழியாக வனத்துறையினர் சிறுத்தையைப் பிடித்து கூண்டில் அடைத்தனர்.

சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த பிரேமா, மனோகரன், சிறுமி மகாலட்சுமி ஆகியோர் குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடியாத்தம் நகர பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள, குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லக்கூடிய வழியில் இருக்கக் கூடிய எர்தாங்கல், கலர்பாளையம் பகுதியில் இதற்கு முன்பு சிறுத்தைகள் நடமாட்டமோ அல்லது வனவிலங்குகள் நடமாட்டமோ இருந்ததில்லை. இதனால் இந்தப் பகுதியில் இதற்கு முன்பு வரைக்கும் எந்த ஒரு வனவிலங்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது இல்லை. இந்நிலையில், நகர் பகுதிக்கு சிறுத்தை வர காரணம் என்ன, சிறுத்தை வந்ததற்கான வழி எது என்பது தொடர்பாக குடியாத்தம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் சிறுத்தை புகுந்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT