
சென்னையில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு மிரட்டி ஈடுபடுத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் விசராணையில் இறங்கினர். அதில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது முதியவர் ஒருவரும், 37 வயதான பெண்ணையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பள்ளியில் படிக்கும் மாணவிகளைத் தனது மகள் மூலம் அந்த பெண் பாலியல் தொழிலுக்கு அழைத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் அந்த பெண்ணுக்கு உதவிய அவரது உறவினர் ராமச்சந்திரன், சுமதி உள்ளிட்ட 8 பேரை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களில் நடனமாடினால் அதிக பணம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை காட்டி தமிழக இளம்பெண்களை அழைத்துச் சென்று பாலியல் தொழிலுக்கு ஒரு கும்பல் ஈடுபடுத்தி வருவதாக இளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இந்த கொடுமையில் சிக்கி தமிழ்நாடு தப்பி வந்த இளம்பெண் அளித்த புகாரில், ‘ஒரு குறிப்பிட்ட கும்பல், இது போன்ற கொடுமையான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில், அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி குறிப்பிட்ட கும்பலை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (24), ஜெயக்குமார் (40), ஆபியா (24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த கும்பல் ஏராளமான இளம்பெண்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி பாலியல் தொழிலுக்கு தள்ளியது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இளம்பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.