
தமிழகத்தில் கரோனா நோய் தொற்றின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இறப்புகளும் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதேபோல், பல மாவட்டங்களில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதேபோல், துரிதமாகச் செயல்பட்டு நோய் பரவலின் தாக்கத்தைக் குறைப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் சில மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனை வாசலிலே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கரோனா சிறப்பு மருத்துவ வாகன ஊர்தியை துவங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, சிகிச்சை பெற வரும் நோயாளிகள் காத்திருப்பதைக் கண்டு நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது, “கடந்த முறை போல அறுவை சிகிச்சைகளை நிறுத்தி வைக்காமல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ உபகரணங்கள் குறித்தும் ரெம்டெசிவிர் மருந்துகள் போன்றவை தேவையான அளவுக்கு இருக்கிறதா என்றும் ஆய்வு செய்தோம். அதுவும் போதிய அளவிற்கு இங்கு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சென்னை மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து இங்கு சிகிச்சைக்காக வருபவர்கள், உயிர் காப்பாற்றப்பட்டு அனுப்பப்படுகிறார்கள் என சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
அதோடு இந்த மருத்துவமனையைப் பொறுத்தவரையில், தமிழக முதலமைச்சரின் சீரிய சிந்தனையில் உருவான மாநகரங்களில் இருக்கும் தலைமை மருத்துவமனைகளில் தினந்தோறும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் துவங்கி வைக்கவுள்ளோம். அதேபோல், 24 மணி நேரம் உணவளிக்கும் திட்டத்தைக் கடந்த 8ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் துவங்கி வைத்திருக்கிறோம். அதுவும் விரைவில் செயல்பட உள்ளது. மருத்துவமனை சுகாதாரம் பேணி காக்கப்பட மாநகராட்சியும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று தவிர்க்க முடியாமல் கரோனா நோயால் உயிர் சேதம் ஏற்பட்டால் உடனடியாக இறந்தவரின் உறவினரோடு கலந்தாலோசித்து, அடக்கம் செய்வதற்கான விரைவு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதையும் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்கள்” என அவர் தெரிவித்தார்.