/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3821.jpg)
சேலத்தில், கார்பைடு ரசாயன கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 260 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத்துறைஅலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. மாம்பழவிளைச்சலுக்கு பெயர் பெற்ற சேலம் மாவட்டத்தில் வழக்கத்தைவிட இந்தமுறை மாம்பழவரத்து இப்போதே அதிகரித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதும் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து சேலம்மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் கதிரவன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி, புஷ்பராஜ், ஆரோக்கிய பிரபு, சிவலிங்கம், குமரகுருபரன், ரவி, முத்துசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் சேலத்தில் உள்ள பழக்கடைகளில் புதன்கிழமை(ஏப். 19) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சேலம் அஸ்தம்பட்டி & ஏற்காடு சாலையில், நடைமேடையில் ஏராளமானோர் பழக்கடைகள் வைத்துள்ளனர். அங்கு நடந்த சோதனையில்,இரண்டு கடைகளில் 260 கிலோ மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவை, கார்பைடுஎனப்படும் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவற்றை உடனடியாக பறிமுதல் செய்தனர்.
மேலும், சாலையோரக் கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 25 கிலோ நெகிழி பைகளையும் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள்பறிமுதல் செய்தனர். நெகிழி பைகளை பயன்படுத்திய 2 கடைக்காரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை கீழே கொட்டி அழித்தனர். மேலும், ரசாயன முறையில் பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என்றும் மாம்பழக் கடைக்காரர்களை எச்சரித்தனர். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதால் வயிற்றுப்போக்கு, அஜீரணம் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும் என்றும்,இதுபோன்ற திடீர் சோதனை அடிக்கடி நடத்தப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)