Skip to main content

"நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதம் 10,000 வழங்க வேண்டும்" நாட்டுப்புற கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு! 

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

"Folk artists should be given Rs 10,000 per month" Folk artists petition to the District Collector!

 

கடலூர் மாவட்டத்தில் தெருக்கூத்து, மேடை நாடகம், பம்பை உடுக்கை, நையாண்டி மேளம் போன்ற கிராமியக் கலைஞர்கள் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தக் கலைத்தொழில் மூலம் அவர்களுக்கு வேலை கிடைப்பது வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே.  

 

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் தொழில் வாய்ப்பில்லாமல், வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. அதிலிருந்து மீள்வதற்கு இந்த ஆண்டு தொழில் வாய்ப்பு கிடைக்கும், வேலை கிடைக்கும் குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்றிருந்த வேளையில், இந்த ஆண்டும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருவிழா உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

 

இதையடுத்து, தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புறக் கலைஞர் சங்கம் கடலூர் மாவட்டக் கிளையின் சார்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நாடக நடிகர்கள், வேடமணிந்து பம்பை, உடுக்கை, நையாண்டி மேளம், பறை இசை போன்ற நாட்டுப்புற இசை வாத்தியங்களை இசைத்து, ஆட்டம் ஆடி, பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

 

அப்போது அவர்கள், "இப்போதுதான் திருவிழாக் காலம் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கினால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடன உடன வாங்கி வயிற்றைக் கழுவினோம். இந்த ஆண்டாவது வேலை கிடைக்கும், எங்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், மீண்டும் ஊரடங்கு என்றால் எங்களின் அன்றாட வாழ்க்கையே  கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கலையும் கலைஞர்களும் அழியும் நிலை உருவாகியிருக்கிறது.

 

எனவே மற்ற நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடு போல், எங்களுடைய கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் 50% அனுமதிக்க வேண்டும். சிறு சிறு கிராமங்களில் கலை நிகழ்ச்சி நடத்த அரசு முன்வர வேண்டும். மேலும் கரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படியென்றால்தான் இதனை நம்பியுள்ள கலைஞர்களின் கலை குடும்பமும் உயிர் பிழைக்கும். இல்லையென்றால் கலையும் இருக்காது, கலைஞர்களும் இருக்கமாட்டார்கள். கடந்த ஆண்டு மூன்றில் ஒரு பங்கு கலைஞர்களுக்கு மட்டுமே அரசு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கியது.  மீதமுள்ள கலைஞர்களை ஏமாற்றிவிட்டது. எங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்ற அரசு தரும் உதவி, எந்த விதத்திலும் எங்கள் கஷ்டத்தைத் தீர்க்காது. ஆகவே நாங்கள் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் கலைப் பண்பாட்டுத் துறையில் அடையாள அட்டை, நலவாரிய புத்தகம் வைத்திருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் மாதம் ரூ. 10,000 வழங்க வேண்டும்" என கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்