நயினார் நாகேந்திரனின் காரில் பறக்கும் படையினர் சோதனை!

Flying soldiers check Nayanar Nagendran's car

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் வீதிமீறல்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில், கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுக்களை பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீரங்கவாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

Flying soldiers check Nayanar Nagendran's car

இந்நிலையில் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போதுபிரச்சாரத்திற்காக நயினார் ஆலங்குளம் அருகே உள்ள இடைக்கால் விலக்கிற்குசென்றபோது, அவரது பரப்புரை வாகனம் மற்றும்காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சோதனையானது சுமார் 10 நிமிடங்கள் வரை நீடித்தது. சோதனையின் முடிவில் பணமோ பரிசுப் பொருட்களோ கைப்பற்றப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக நயினார் நாகேந்திரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக நேற்று (08.04.2024) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததால் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

campaign Tirunelveli
இதையும் படியுங்கள்
Subscribe