Advertisment

குப்பைக்கு போகும் பூக்கள்... விவசாயிகளின் கண்ணீர்...

நெல் விவசாயத்தோடு காய்கனி, தானியங்களை விளைவித்து கொண்டிருந்த விவசாயிவீட்டு பெண்கள் காட்டுப் பூக்களை பறித்து தலையில் வைத்துக் கொண்டனர். இந்தநிலையில்தான் வறட்சி வாட்டத் தொடங்கியபோது காய்கனி, தானியங்களோடு ஓரமாக மனம் வீசும் மல்லிகை, கனகாம்பரம் என மலர்களையும் பயிரிடத் தொடங்கினார்கள். மேலும் வறட்சி வதைக்க முழுக்க முழுக்க மலர்கள் உற்பத்தியை செய்யத் தொடங்கினார்கள் விவசாயிகள்.

Advertisment

flower

இது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதன்மையாக பொறுந்தும். 1980 வரை அனைத்து விவசாயிகளையும்போல காய், கனி, தானியங்களை பயிரிட்டனர். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது வறட்சியை தாங்கி வளரும் மலர் செடிகளை வளர்க்கத் தொடங்கினார்கள். முதலில் கனகாம்பரம் அதிகமாக பயிரிடப்பட்டது. தினசரி காலை ஒவ்வொரு தோட்டமாக சென்று மலர்களை வாங்கிவரும் வியாபாரிகள் மொத்தமாக வெளியூர்களுக்கு அனுப்பினார்கள்.

அதன் பிறகு மல்லிகை, முல்லை, போன்ற பூ செடிகளையும் விவசாயிகள் பயிரிடத் தொடங்கியதும் மாவட்டத்தில் பெரிய சந்தை கீரமங்கலத்தில் உருவானது. கீரமங்கலத்தை சுற்றி செரியலூர், பனங்குளம், குளமங்கலம், நெய்வத்தளி, பாண்டிக்குடி, பெரியாளூர், கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம், மேற்பனைக்காடு, மாங்காடு, வடகாடு, அணவயல், கறம்பக்காடு என்று 100 கிராமங்களிலும் ஆலங்குடி அருகில் உள்ள மழையூர், வம்பன், திருவரங்குளம் பகுதியில் உள்ள சுமார் 100 கிராமங்களிலும் முழுமையாக மலர்கள் சாகுபடியை விவசாயிகள் நம்பினார்கள்.

Advertisment

 Flowers that go to the trash ... tears of farmers ...

ஒவ்வொரு நாளும் தங்கள் தோட்டங்களில் பறிக்கப்படும் மலர்களை கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, கைகாட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மலர் கமிசன் கடைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். அதனால் இந்த பகுதியில் காலை 5 மணி முதல் 11 மணி வரை கடைவீதி பரபரப்பாகவே இருக்கும். அந்த நேரங்களில் செல்லும் அரசு, தனியார் பேருந்துகளில் பூ மூட்டைகள் பயணிக்கும். ஒரு நாளைக்கு 15 டன் வரை மலர்கள் சந்தைக்கு வந்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லி, ரோஜா, அரளி, சம்பங்கி, வாடாமல்லி, செண்டி, இப்படி அனைத்து வகை மலர்களும் உற்பத்தி செய்யப்படும் விவசாய பூமி. இவ்வளவு மலர்கள் உற்பத்தி செய்யப்படுவதால் நறுமண திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை, மலர்களை வைத்து பாதுகாக்கும் குளிர் சாதன கிடங்கு வேண்டும் என்று விவசாயிகள் வைத்த கோரிக்கைகளை அரசியல்வாதிகள் தேர்தல் நேரங்களில் காது கொடுத்து கேட்பார்கள். அதன்பிறகு அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். இப்படி ஒரு வசதி இல்லாததால் கடந்த சில வருடங்களாக ஒரு நாளைக்கு ஒரு டன் முதல் 3 டன் வரை பூக்கள் குப்பைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பதுதான் வேதனை.

விவசாயிகள் வியர்வை சிந்தி உற்பத்தி செய்த மலர்களை குப்பையில் அள்ளிக் கொட்டுவதைப் பார்க்கும் போது மனது வேதனைப்படுகிறது. அதேபோலதான் தற்போது ஒரு நாளைக்கு 3 டன்கள் வரை மலர்கள் பேரூராட்சி குப்பை வண்டிகளில் அள்ளப்படுகிறது. காரணம் என்ன என கேட்டால்உற்பத்தி அதிகம், விற்பனை குறைவு என்று ஒற்றை வரியில் பதில் சொல்கிறார்கள். ஒரு கிலோவுக்கு ரூ. 30 வரை செலவு செய்து உற்பத்தி செய்யும் விவசாயிக்கு கிடைக்கும் விலை ரூ. 5. இதைப் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வராதா?

இது குறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறும் போது.. 1975 – 80 காலக்கட்டத்தில் கீரமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் கனகாம்பரம் பூக்கள் தான் விவசாயம். அப்ப பால் வெண்டர்கள் போல பூ வியாபாரிகள் வீட்டுக்கு வீடு வந்து பூக்களை வாங்கிட்டு போய், தஞ்சாவூர், திருவாரூர், சென்னை வரை அனுப்புவாங்க. அப்பறம் வறட்சி ஏற்படதான் எல்லா விவசாயிகளும் மலர்கள் விவசாயத்திற்கு இறங்கிட்டாங்க. அதன் பிறகு அதாவது 1990 க்கு பிறகு.. மல்லிகை, முல்லை, காட்டுமல்லி, செண்டி, வாடாமல்லி, கோழிக்கொண்டை இப்படி பல மலர்களும் உற்பத்தி தொடங்கியது. அதனால் முதலில் கீரமங்கலத்தில் மலர் கமிசன் கடைகள் உருவானது. விவசாயிகள் தங்களிடம் விளையும் மலர்களை கமிசன் கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்பது வழக்கம். அப்பறம் அனைத்து மலர்களும் விவசாயம் செய்ய தொடங்கியாச்சு. தஞ்சை, நாகை, திருவாரூர், வேளாங்கன்னி, வேதாரண்யம் வரை பூ வியாபாரிகள் வந்து பூ வாங்கிச் செல்கிறார்கள்.

flower

உற்பத்தி அதிகமாக இருப்பதால் சென்டு தொழிற்சாலையும், ஏசி. குடோனும் ஏற்படுத்த ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் கோரிக்கை மனு கொடுக்கிறது வழக்கம். மனுவை வாங்குற அத்தனை கட்சிகளும் விவசாயிகளுக்காக செய்றோம்னு சொல்லிட்டு போவாங்க. அவ்வளவு தான். அடுத்தடுத்த தேர்தலுக்குதான் அந்த கோரிக்கை பற்றி பேசுவாங்க. அதனால இப்ப எங்கள் உழைப்பு, பணம் அத்தனையும் குப்பைக்கு போகுது.

திருவிழாக்கள், முகூர்த்த நாட்களில் விலை கூடுதலாக மலர்கள் விற்பனை ஆகும் மற்ற நாட்களில் விலை குறைவாக இருக்கும். ஆனால் இப்ப மலர்களை விற்க முடியாமல் குப்பையில் கொண்ட வேண்டிய நிலை வந்திருச்சு. இதைப் பார்க்கும் போது ஒவ்வொரு விவசாயியும் கண்ணீர் தான் வடிக்கிறார்கள்.

இதற்கு காரணம் ஐப்ரிட் விதைகள் வந்தது தான். அதாவது செண்டி, உள்ளிட்ட மலர்கள் முன்பு நம்ம நாட்டு ரகம் உற்பத்தி செஞ்சோம் எந்த பக்கவிளைவும் இல்லை. அதனால கோயில்களில் மாலைகள் போட்டாங்க. ஆனா மலர்களின் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று வியாபாரிகள் ஐப்ரிட் செண்டி விதைகளை விவசாயிகளுக்கு கொடுத்ததால அதை வாங்கி பயன்படுத்தும் போது செலவும் அதிகம். அதாவது ரொம்ப பாதுகாப்பா வளர்க்க அதிக செலவு செய்யனும். அப்படி செலவு செஞ்சு அந்த சென்டி பூக்களை பறிக்கும்போது கைகளில் அரிப்பு, அதை எடை போடும் தொழிலாளிக்கு அரிப்பு, மாலை கட்டுபவருக்கு அரிப்பு, மாலையை வாங்கி சுவாமிக்கு போடும் குருக்கலுக்கும் அரிப்பு. இதைப் பார்த்து குருக்கள்கள் செண்டி மாலை வேண்டாம் என்று தடை போட்டுவிட்டார்கள். அதனால செண்டிப் பூக்கள் விற்பனை குறைந்துவிட்டது. நம்ம நாட்டு செண்டியால இந்த பிரச்சணை இல்லை.

அதேபோல சம்பங்கி பூக்களிலும் ஐப்ரிட் வந்துவிட்டது. அதுவும் ஒரே நாளில் விற்கவில்லை என்றால் அடுத்த நாள் கெட்டுப் போகும். இப்படி நம்ம நாட்டு ரகம் மாறியதால்தான் இப்ப குப்பைக்கு போற அளவுக்கு போயிடுச்சு. அதனால ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு நாளும் நட்டம் வருது. ஒரு நாளைக்கு 3 டன் மலர்கள் குப்பைக்கு போனால் என்ன செய்றது. அரசாங்கம் இனியாவது மலர் விவசாயிகளை காப்பாற்ற செண்டு தொழிற்சாலை, குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு கிடங்கு கொடுத்தால் விவசாயிகள் வாழ முடியும் என்றனர் வேதனையாக.

அதேபோல ஐப்ரிட் மலர்களை தவிரத்து மீண்டும் நம்ம நாட்டு மலர்களை உற்பத்தி செய்ய வியாபாரிகள் விவசாயிகளுக்கு விதைக்ள கொடுத்தால் விவசாயிகளையும், மலர் உற்பத்தியையும் காப்பாற்றலாம்.

Farmers Fear flowers Market Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe