ADVERTISEMENT

குப்பைக்கு போகும் பூக்கள்... கொள்முதலை நிறுத்தும் வியாபாரிகள்... கண்ணீரில் விவசாயிகள்!!

09:04 PM Apr 22, 2020 | kalaimohan

கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்படத் தொடங்கிவிட்டனர். காய்கறி விவசாயிகள் தங்கள் காய்கறிகளை விற்க முடியவில்லை என்று குமுறினார்கள். பிறகு புதுக்கோட்டை மாவட்டம் தொடங்கி தமிழகம் முழுவதும் காய்கறிகளை தோட்டக்கலை அலுவலர்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு குறைந்த விலையிலாவது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மலர்கள்?

ADVERTISEMENT


மதுரை, திருச்சிக்கு அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம்தான் மலர் சந்தைகளில் பெரியது. ஒரு நாளைக்கு சுமார் 15 முதல் 20 டன் மலர்கள் விற்பனை செய்யப்படும் சந்தை இது. மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லி, ரோஜா, சம்பங்கி, செண்டி, வாடாமல்லி, அரளி என அத்தனை வகை மலர்களும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யும் இடமாக உள்ளது. ஆலங்குடிக்கு கிழக்கு வம்பன், திருவரங்குளம், மழையூர், செம்பட்டிவிடுதி தொடங்கி கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், மாங்காடு, வடகாடு, சேந்தன்குடி, நகரம், அணவயல், மேற்பனைக்காடு, நெய்வத்தளி என சுமார் 100 கிராமங்களில் பிரதான விவசாயங்களில் ஒன்று மலர்கள் உற்பத்தி. இவ்வளவு உற்பத்தி இருக்கும் இடத்தில் ஒரு நறுமணத் தொழிற்சாலை வேண்டும் என்று ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் வேட்பாளர்களிடம் கோரிக்கை வைப்பது, பிறகு ஏமாறுவதும் விவசாயிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது.

ADVERTISEMENT



தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் மலர்கள் தோட்டங்களிலேயே பறிக்கப்படாமல் மலர்ந்து கொட்டியது. கடந்த ஒரு வாரமாக சிறு, சிறு சில்லரை வியாபாரிகள் மூலம் வீட்டுக்கு வீடு விற்பனைக்காக கொஞ்சம், கொஞ்சம் மலர்களை விவசாயிகள் பறித்து வந்து கடைகளில் கொடுத்தனர். ஆனால் ஒவ்வொரு நாளும் வியாபாரிகள் வராததால் டன் கணக்கில் குப்பைக்கு போனது மலர்கள்.

விவசாயிகளின் மலர் உற்பத்தி செலவு தொகையை கொடுக்க முடியாது என்றாலும் மலர்கள் பறிக்கும் கூலி அளவுக்கு கமிசன் கடைகாரர்கள் பணம் கொடுத்தனர். ஆனால் அந்த தொகையையும்கூட தொடர்ந்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு வியாழக்கிழமை முதல் மலர்கள் கொள்முதலை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் கண்ணீரோடு நிற்கிறார்கள்.


இது குறித்து விவசாயிகள் கூறும் போது, புயல் வந்து செடிகளை அழித்தது. இப்ப கரோனா வந்து மலர்களையும் மலர் விவசாயிகளையும் அழிக்கிறது. ஒரு மாதமாக மலர் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு கணக்கில் அடங்காது. மலர் விற்ற காசு தினசரி வீட்டு செலவினங்களுக்காகவும், குழந்தைகளின் படிப்பு செலவுக்கும் பயன்பட்டது, ஆனால் இப்போது ஒரு வழியும் இல்லை. பூக்களை பறிக்காமல் விட்டால் செடிகள் கெட்டுப் போய்விடும் என்பதால் அதற்கும் கூலி கொடுத்து பறித்து கீழே கொட்டுகிறோம். ஒரு வாரம் கமிசன் கடைகளில் கொஞ்சம் மலர்கள் வாங்கினார்கள். அவர்களும் அதை விற்க முடியாமல், குப்பையில் அள்ளிக் கொட்டுகிறார்கள். அவர்களிடம் வாங்கிய கடன்களையும் கட்ட முடியவில்லை. கமிசன் கடைகாரர்களும் எவ்வளவுதான் நட்டமடைவார்கள். அதனால் வியாழக்கிழமை முதல் மலர்கள் வாங்குவதை நிறுத்துவதாக கூறிவிட்டனர்.

தமிழக அரசு மலர் விவசாயிகளின் தோட்டங்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது என்கின்றனர். மணக்க வேண்டிய மலர் விவசாயிகளின் வாழ்க்கை கண்ணீரில் கரைகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT