Skip to main content

ஒரே நேரத்தில் 3 தேர்களின் தேரோட்டம்... அமைச்சர் துவக்கிவைப்பு!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

The flow of 3 chariots at the same time ... Minister launches

 

தமிழகத்தில் சித்திரை பிறந்ததிலிருந்து கோவில் திருவிழாக்கள் தொடங்கிவிடுவது வழக்கம். கடந்த சில வருடங்களாக கரோனா காரணங்களால் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அனைத்து கோவில் திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், குளமங்கலம் வடக்கு மணிவர்ண மழை மாரியம்மன் கோவில், மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோவில்களில் ஒரே நேரத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வானவேடிக்கைகளுடன் அம்மன் வீதி உலாவும் இரவு கலை நிகழ்ச்சிகளும், அன்னதான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

 

The flow of 3 chariots at the same time ... Minister launches

 

இன்று தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு காய், கனி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கொத்தமங்கலம் கோவில் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கிராமத்திலும் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

 

கொத்தமங்கலத்தில் மட்டும் ஒரே நேரத்தில் 3 தேர்களின் தேரோட்டம் நடந்தது. அதாவது வாழவந்த பிள்ளையார் தேரை சிறுவர்கள் மட்டுமே இழுத்துச் சென்றனர். அடுத்ததாக பேச்சியம்மன் தேரை பெண்களும் 3-வதாக முத்துமாரியம்மன் தேரை அனைத்து பக்தர்களும் இழுத்துச் சென்றனர். ஒரே நேரத்தில் 3 தேர்களின் தேரோட்டம் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.