Skip to main content

வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

Floods: Authorities warn coastal people

 

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கல்வராயன் மலை - துறையூர் அருகே உள்ள பச்சைமலையில் இருந்துவரும் வெள்ளாறு திருவாலந்துறை என்ற இடத்தில் ஒன்று கூடுகிறது. இந்த ஆற்றில் தொழுதூர் அருகே குறுக்கே அணை கட்டப்பட்டு, அந்த அணையின் வடபகுதி கால்வாய் மூலம் திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அதே போல் அணையின் தென் பகுதியில் உள்ள கால்வாய் மூலம் ஒகளுர், அத்தியூர், அகரம் சீகூர் ஆகிய ஊர்களில் உள்ள ஏரிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

 

தற்போதைய மழை காரணமாக தொழுதூர் அணைக்கட்டிலிருந்து மேற்படி ஏரிகளுக்குச் செல்லும் தண்ணீரால் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் இருந்தும், திருச்சி மாவட்டம் பச்சமலையிலிருந்தும் மழை வெள்ளம் அதிகரித்து வெள்ளாற்றில் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. அதன் காரணமாக இன்று தொழுதூர் அணைக்கட்டிலிருந்து 1,630 கனஅடி தண்ணீர் வெள்ளாற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றைக் கடந்து பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வருவாய்த்துறையினர், பொதுப்பணித் துறையினர், காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அங்கிருந்து திட்டக்குடி, பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி வழியாகச் சென்று சேத்தியாதோப்பு கடந்து பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. எனவே வரலாற்றில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் பெருகும், கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது, விவசாயம் செழிக்கும் என்று கூறுகின்றனர். சமீப மழை காரணமாக ஆறுகளிலும், ஏரிகளிலும் தடுமாறியும், குளிப்பதற்காக இறங்கியும் எதிர்பாராமல் இறக்கும் மனிதர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள் அரசு அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும்” - அன்புமணி

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
Anbumani said that the central govt should provide funds requested by TN govt without delay

சென்னையில் மழை - வெள்ளம்  பாதித்து ஒரு மாதம் நிறைவு நிறைவடைந்த நிலையில், தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக, கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரிடர் நிகழ்ந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால், மழை - வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் கோரப்பட்ட நிதி மத்திய அரசால் இன்று வரை வழங்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று மழை - வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி சென்னை வந்த மத்தியக்குழு 4 நாள் ஆய்வுக்குப் பிறகு டிசம்பர் 14-ஆம் தேதி தில்லி சென்றடைந்தது. ஆய்வு  முடிவடைந்த ஒரு வாரத்திற்குள் பரிந்துரை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்போவதாக மத்தியக் குழு தெரிவித்திருந்தது. ஆனால், மத்தியக்குழு டெல்லி சென்று 20 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்று வரை பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்ததாக தெரியவில்லை. பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்வதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.

வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக உடனடி உதவியாக ரூ.7,033 கோடி, நிரந்தரப் பணிகளுக்கான உதவியாக ரூ.12,659 கோடி என மொத்தம் ரூ.19,692 கோடி நிதி வழங்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் கோரிக்கை. உடனடி உதவி என்பது புயல் - வெள்ளம் பாதித்த ஒரு சில நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டிய உதவி ஆகும். ஆனால், ஒரு மாதம் ஆகியும் இதுவரை எந்த உதவியும் வழங்கப்படாததால் மழை - வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேங்கிக் கிடந்த தண்ணீரை வெளியேற்றியது, பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு பிரிவினருக்கு ரூ.6000 நிதி வழங்கியது போன்றவற்றைத் தவிர வேறு எந்த நிவாரணப் பணிகளையும் தமிழக அரசால் செய்ய முடியவில்லை. நிலைமையை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்கள் அவற்றின் லாபக் கணக்கை தணிக்கை செய்வதற்கு முன்பாகவே லாப ஈவுத்தொகையில் 90 விழுக்காட்டை  இடைக்கால ஈவுத்தொகையாக வழங்க வேண்டும் என்று நிதித்துறை ஆணையிட்டுள்ளது. இதனால் பொதுத்துறை நிறுவனங்களும், அவற்றின் சமூகப்பொறுப்புணர்வு பணிகளும் கடுமையாக பாதிக்கப்படக் கூடும். இவை அனைத்திற்கும் காரணம் மத்திய அரசின் நிவாரண உதவி உரிய காலத்தில் கிடைக்காதது தான்.

மத்தியக் குழு அதன் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்து, அதன் பின்னர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கூடி, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. அதுவரை வெள்ள நிவாரணப் பணிகளை முடக்கி வைக்க முடியாது. எனவே, தமிழக அரசு கோரிய மழை - வெள்ள நிவாரண உதவியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும். மத்தியக் குழுவின் அறிக்கையும், அதன் மீதான ஆய்வும் தாமதமாகும் என்றால், இடைக்கால நிவாரணமாக தமிழகஅரசு கோரிய உடனடி உதவியான ரூ.7,033 கோடியை உடனடியாக வழங்க மத்தியஅரசு முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் - முத்தரசன் 

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
CPI has announced that it will hold a state-wide struggle against central govt

ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கை  கண்டித்தும்,  பேரிடர் நிவாரண நிதி முழுமையாக வழங்க வலியுறுத்தியும் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம புயல் காரணமாக பெய்த பெருமழையால், தலைநகர் சென்னையும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போனது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவித்த மக்களை பாதுகாக்கவும், மீட்டு மறுவாழ்வு தொடங்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட்டது  பேரிடர் நிவாரண உதவிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டிய ஒன்றிய அரசு, மாற்றாந்தாய் போக்கில் அலட்சியம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் டிசம்பர் 18 ஆம் தேதி தென் தமிழ்நாட்டில் பெய்த பெருமழையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி  மற்றும் தூத்துக்குடி மாநகர தெருக்களிலும், வீடுகளிலும் வெள்ளம் புகுந்து தேங்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2 கோடி மக்கள் வாழும் பகுதி பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் கோரியுள்ள ரூபாய் 21 ஆயிரத்து 692 கோடியை முழுமையாக உடனடியாக வழங்க வேண்டும். ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் அவதூறு பேசி, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவதை, வெந்த புண்ணில் வேல் கொண்டு தாக்குவதாக அமைந்துள்ளது. 

மத்தியக் குழு விரிவாக பயணம் செய்து, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளது. ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பார்வையிட்டு சென்றுள்ளார். தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி, முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். இவ்வளவுக்கும் பிறகு இதுவரை தமிழகம் சந்தித்த இயற்கை சீற்றப் பேரழிவை எதிர்கொள்ள பேரிடர் நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழ்நாடு  அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்கவும் வலியுறுத்தி 08.01.2024 திங்கள் கிழமை தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.