
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்கத் துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்துள்ளது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியை இணைக்கும் தலைப்பாளம் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நீரில் மூழ்கியுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து 5000 கரடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இரு மாவட்ட மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.