Advertisment

வெள்ளக்காடான கன்னியாகுமரி..! 

Flooded Kanyakumari ..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11ஆம் தேதியிலிருந்து வரலாறு காணாத பேய் மழையால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதில் நூற்றாண்டுகள் பல கண்ட வில்லுக்குறி இரட்டைகரை சானல் பாலம் உடைப்பு ஏற்பட்டதால் வில்லுக்குறி - பேயங்குழி சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலைகளை மூழ்கடித்ததோடு திருவனந்தபுரம் - நாகா்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஒருநாள் முமுவதும் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

Advertisment

அதேபோல் நாகர்கோவில் ஒழுகினாசேரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நாகர்கோவில் - நெல்லை போக்குவரத்து நாள் முழுவதும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். மேலும், முக்கிய சந்தையான அப்டா மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீரில் மூழ்கின. மேலும், முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2 திறக்கப்பட்டதால் மலைக் கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தாமிரபரணி, வள்ளியாறு, கோதையாறு உள்ளிட்ட ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. இதனால் 90க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள், நகரங்கள் என மூழ்கடிக்கப்பட்டு குடியிருப்புகள், விவசாய நிலங்கள் ஆகியவை தண்ணீரில் மிதந்தன. இதில் சுசீந்திரம், தேரூர், கற்காடு, கடுக்கரை, பூதப்பாண்டி, காட்டுபுதூர், வடசேரி, ஆஸ்ரமம், தோவாளை, திருப்பதிசாரம், குழித்துறை, நித்திரவிளை, தேங்காய்பட்டணம், புதுக்கடை, தக்கலை போன்ற பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். இதில் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். இவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநில மீட்பு படையினர் படகு மூலம் சென்று மீட்டு முகாம்களில் தங்கவைத்தனர். இவர்களுக்கு அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் கண்காணிப்பு மூலம் உணவுகள், மருந்துகள் கொடுக்கப்பட்டன. 3 நாட்களில் 4,200 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இதைப்போல் முக்கிய கோவிலான சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் மற்றும் வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் ஆகியவற்றில் வெள்ளம் சூழ்ந்து பூஜைகள் தடைப்பட்டன. மேலும், ரயில் தண்டவாளங்களில் 30 கிமீ தூரத்துக்கு வெள்ளம் நிரம்பியதாலும் மேலும் 11 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதாலும் நாகர்கோவிலில் இருந்து கேரளா, சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் 15 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., பெரியகருப்பன் மற்றும் ஆட்சியர் அரவிந்த், கண்காணிப்பு அதிகாரி, ஜோதிநிர்மலா, காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்றுமீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினார்கள். இவர்களோடு அந்தந்த பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காவல்துறை பெண் அதிகாரிகளும் துணிச்சலுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தரும்படி அவர்களோடு இருந்தனர். அரசு இயந்திரங்களும் அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க வேகமாக செயல்பட்டதால் மக்களுக்குப் பெரியளவு உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது ஆறுதல் தருவதாக மக்கள் கூறுகின்றனர்.

குமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவு வெள்ளப் பாதிப்புகளுக்குக் காரணம் விளைநிலங்கள் மற்றும் பொது இடங்கள் ஆக்கிரமிப்பும் விளைநிலங்களில் குடியிருப்புகள் கட்டியிருப்பதாலும்தான் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Kanyakumari
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe