கர்நாடகா மாநிலத்தில் குடகு மற்றும் மேற்குப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த மூன்று வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் கர்நாடகாவின் முக்கிய அணைகளான கபினி, கே.ஆர்.எஸ் மற்றும் ஹேரங்கி ஆகியவை முழு கொள்ளவை அடைந்தது. இதனால் அணைகளுக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக தமிழக மேட்டுர் அணைக்கு திறந்துவிடப்பட்டது.

Advertisment

ஏறக்குறைய ஒரு லட்சம் கன அடி வரை நீர் வந்ததால் மேட்டூர் அணை முழுமையாக 120 அடியும் நிரம்பியது. இதனால் உபரி நீர் 16 கண் மதகுமூலம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது மேட்டுர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது. தமிழகத்தின் பாசனத்திற்காக 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அங்குள்ள அணைகளுக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

Advertisment

இதன் அடிப்படையில் கபினியிலிருந்து 70 ஆயிரம் கன அடியும் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 55 ஆயிரம் கன அடி என தற்போதைய நிலவரப்படி 1.25 லட்சம் கண அடி நீர் மேட்டுர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இதனால் மீண்டும் மேட்டூர் அணை நாளை இரவுக்குள் முழு கொள்ளளவான 120 அடி நிரம்பும். அதன் பிறகு வருகிற உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும்.

அதனடிப்படையில் நீர்வரத்து தொடருமானால் தமிழக காவிரி கரையோரப் பகுதிகளுக்கு மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. கர்நாடகா திறந்து விடும் நீரின் அளவு 1.25 லட்சத்திலிருந்து 1.50 லட்சமாக உயர வாய்ப்புள்ளது என்கிறார்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள். இந்தாண்டு இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்புகிறது.

Advertisment