Skip to main content

கொள்ளிடம் ஆற்றில் 5-வது நாளாக வெள்ளம்! - 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் பாதிப்பு!

Published on 21/08/2018 | Edited on 27/08/2018
flood


கொள்ளிடத்தில் 5-வது நாளாக தொடர்ந்து அதிகமாக தண்ணீர் செல்வதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததுள்ளது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டூருக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லணையில் இருந்து கீழணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடத்தின் இரு கரைகளும் தொட்டவாறு செல்கிறது.

கொள்ளிடத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் அந்த தண்ணீர் வேளக்குடியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் எதிர்த்து வந்து வல்லம்படுகை, கொள்ளிடம், எருக்கன்காட்டுபடுகை, வேளக்குடி, பழையநல்லூர், கண்டியாமேடு உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்பு பகுதி மற்றும் நெல், கரும்பு, வாழை நிலங்களில் உள்ள பயிர்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

flood


சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களான திட்டுக்காட்டூ, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய ஊர்களில் ஆள் உயரத்துக்கு தண்ணீர் நிற்கிறது. அக்கிராமங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக புயல் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். பலர் அவர்கள் வீட்டு மாடியில் உள்ளனர். வருவாய்த்துறையினர் அவர்களுக்கு படகு மூலம் உணவு அனுப்பி வைத்தனர். இப்பகுதியில் உள்ள 3 ஆயிரத்து 500 பேருக்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 21 கிராமத்தில் வெள்ள நீர் புகுந்து கடும் பதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருவாய்துறை ஊழியர்கள் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை அனுப்பி வருகின்றனர். பழைய கொள்ளிடத்தில் அதிக அளவில் முதலைகள் கரை ஒதுங்குவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிதம்பரம்,காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் கொள்ளிடம் ஆற்று படுகையில் ஐந்துஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள நெல், வாழை, கரும்பு, மிளாகாய், கத்திரி, மரவள்ளி உள்ளிட்டவைகள் பாதிப்படைந்துள்ளது.
 

flood


இது குறித்து அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது எங்கள் ஊரை சுற்றி தண்ணீர், ஆனா குடிக்க எங்களுக்கு தண்ணீர் இல்லை. அரசு அதிகாரிகள் உணவு தருகிறார்கள் ஆனால் நேரத்திற்கு வரவில்லை. இளைஞர்களாகிய நாங்கள் நல்ல உள்ளங்களின் உதவியை பெற்று எங்களால் ஆன உதவியை கிராம மக்களுக்கு செய்து வருகிறோம். மின்சாரம் இல்லை, ஊரில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்திருதாலும் எங்களின் வாழ்வாதரமாகிய ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை அனாதையாக இங்கு விட்டுவிட்டு நாங்கள் மட்டும் பாதுகாப்பாக வெளியேற மனமில்லாமல் வீட்டின் மாடிகளிலும், மேடான பகுதியிலும் கிடைக்கும் உணவை சாப்பிட்டு வாழ்ந்து வருகிறோம் என்றார்.

சார்ந்த செய்திகள்