Skip to main content

“எம் புள்ளய எப்புடியாச்சும் காப்பாத்தி குடுங்கையா..” - மருத்துவரிடம் கதறும் தாய்..

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

Fiver year old kid seeking medical emergency

 

தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகரில் மேலூர் வாட்டர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சீதாராஜ். இவரது மனைவி பிரேமா. இவர்கள் இருவரும் அன்றாடம் கட்டட வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள். கட்டட வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பு எரியும் என்ற விளிம்பு நிலைக் குடும்பம். இவர்களுக்கு தனம் (12), இசக்கியம்மாள் (5) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

 

5 வயது சிறுமியான இசக்கியம்மாள் பக்கத்து வீடு மற்றும் அக்கம்பக்கத்து குழந்தைகளுடன் விளையாடுவது வழக்கம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிறுமி இசக்கியம்மாள் பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சமயம், அங்குள்ள வாசிங் மெஷின் மீது அதனை சுத்தம் செய்ய வைத்திருந்த கிளீனிங் பவுடரை திண்பண்டம் என்று நினைத்துச் சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து மறுநிமிடம் சிறுமியால் உணவு தண்ணீர் சாப்பிட முடியாமல் வயிறு வலி மற்றும் எரிச்சலால் துடித்திருக்கிறார். வேலையிலிருந்து வீடு திரும்பிய அவளின் பெற்றோர்கள் அவள் படும் வேதனையைக் கண்டு பதறியபடி சிறுமியை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஆரம்பகட்ட சிகிச்சை செய்த மருத்துவர்கள், பின்னர் அவரை பாளை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் ஓரளவு சிறுமி குணமடைந்ததாகத் தெரிவித்து கடந்த மாதம் அவளை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

 

Fiver year old kid seeking medical emergency
                                                         சிறுமி   இசக்கியம்மாள்


ஆனால் சிறுமியால் கடந்த ஒரு மாதமாக உணவு எதும் சாப்பிட முடியாமல் எடை குறைந்து எலும்பும் தோலுமாய், உடல் மெலிந்திருக்கிறது. அதையடுத்து தற்போது அவளை சிகிச்சைக்காக பெற்றோர்கள் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே தலைமை மருத்துவரான ராஜேஷ் கண்ணா தலைமையில் டாக்டர்கள் சிறுமிக்கு சிகிச்சையளித்துவருகின்றனர். சிறுமியின் சிகிச்சையில் மிகவும் அக்கறை எடுத்து கவனித்துவருகிறார் தலைமை மருத்துவரான ராஜேஷ் கண்ணா. மேலும், அவர் இதுபற்றி கூறுவது, “சிறுமி இசக்கியம்மாள் தின்ற பொருளின் தாக்கம் இருக்கிறது. அது உடலில் தங்கியிருக்கலாம் என்றும் தெரிகிறது. ஆனாலும் நாங்கள் தற்போது சிறுமியைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளித்துவருகிறோம். இரண்டு நாட்கள் கழித்து சிறுமியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். அதற்கான செலவு அனைத்தையும் நானே ஏற்றுக்கொள்வேன்” என்றார் கருணையோடு.

 

Fiver year old kid seeking medical emergency

 

தன் மகள் எதுவும் சாப்பிட முடியாமல் உடல் மெலிந்து வாடியிருக்கும் நிலையில் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் அவளது அம்மா பிரேமாவோ, “நா வேலைக்குப் போயிட்டேன். வந்து பாத்ததும் புள்ள துடிச்சுட்டு இருந்தா. ஆசிட் பொடி, கிளினிங் பொடி அப்புடின்னு சொன்னாங்க. அவ என்ன பொடியச் சாப்புட்டான்னு தெரியல. பக்கத்து வீட்டுலதான் சொன்னாங்க. ஒடனே தென்காசி மருத்துவமனைக்குக் கொண்டு போனேன். அங்க 15 நாள் சிகிச்சையில இருந்தா. வீட்டுக்கு வந்தும் புள்ள ஆகாரம் எதுவும் சாப்புடல. அதுக்கப்புறம் ஹைகிரவுண்டுக்கு அனுப்பிட்டாங்க. அங்க குடல விரிச்சுவிட்டு சிகிச்சை பண்ணாங்க. அப்புறம் 15 நாள் கழிச்சு கொடல விரிச்சுவிட்டாங்க இப்புடி 3 தடவ செய்யணும்னு சொன்னாங்க. ஆனா இன்னிய வரைக்கும் புள்ள ஆகாரம் எதுவும் சாப்புடல. உடல் மெலிஞ்சு போயிட்டா. 4 மாசமா என் புள்ளயோட நெலமைய பாத்து என்னால வேல செய்ய முடியல. குடும்ப பாடு சிக்கலா இருக்கு. எம் புள்ளய எப்புடியாச்சும் காப்பாத்திக் குடுங்கையா” என்றார் கண்ணீர் மல்க.

 

உடல் மெலிந்து உயிருக்குப் போராடும் சிறுமி மீது அரசு கருணையோடு தனி கவனம் செலுத்துமேயானால் அந்தப் பிஞ்சுக்கு மறுவாழ்வு கிடைக்கலாம்.

 

 

சார்ந்த செய்திகள்