/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/duraikannu_1.jpg)
அமைச்சர் துரைக்கண்ணுவின் ஆதரவளார்களாக இருந்த கள்ளபுலியூர் ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்திருப்பதோடு 500க்கும் அதிகமான காவல்துறையினரை குவித்திருப்பது கும்பகோணம் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கள்ளபுலியூர் ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் மனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பெரியவன் என்கிற முருகன் (39). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-in-3_0.jpg)
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கள்ளபுலியூர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டவர், அவரை எதிர்த்துப்போட்டியிட்ட சிலரையும் பணம் மற்றும் மிரட்டலால் பணியவைத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மணல் கடத்தல், சாராயக் கடத்தல், உள்ளிட்ட வேலைகளை செய்துவந்த முருகன், ஒரு கட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணுவின் இளையமகன் ஐயப்பனின் நட்பு கிடைக்கப்பெற்று அமைச்சரிடம் நெருக்கமானார்.
அதன்பிறகு பலவழியிலும் சம்பாத்தியம் கண்ட முருகன் கும்பகோணத்தின் முக்கிய இடமான அண்ணா காய்கனி மார்க்கெட்டை ரூ.3 கோடிக்கு டெண்டர் எடுத்து குடந்தை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கினார். எங்கு திரும்பினாலும் பெரியவன், என்கிற நிலையை உருவாக்கும் விதமாக போஸ்டர் மீது போஸ்டர் ஒட்டி பட்டைய கிளப்பிட செய்துவந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-in-5_0.jpg)
இந்தநிலையில் 5ஆம் தேதி இரவு திடீரென காவல்துறையினரால் முருகன் கைது செய்யப்பட்டார். கைதுக்கான காரணம் தெரிவிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். முருகன் கைதை கண்டித்து அவரது உறவினர்களும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் கும்பகோணம் புறவழிச்சாலையில் 3 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புறவழிச்சாலை பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. போலீஸ் ஐ.ஜி. ஜெயராம் தலைமையிலான 4 மாவட்ட எஸ்.பி.க்கள், ஏ.டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-in-4.jpg)
போராட்டத்தில் இருந்தவர்களிடம் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் விஜயன் உள்ளிட்ட அதிகாராகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களோ அவர்களின் பேச்சுவார்த்தையை நிராகரித்து சாலை மறியலை தொடர்ந்தனர். போலீஸார் ஒலிபெருக்கி மூலம் கலைந்து போக அறிவுறுத்தினர். ஆனாலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்த ஆயத்தமானதை அறிந்தவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையில் முருகனோடு அவரது சகோதரி மகன் சக்திவேல் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வேதா, கும்பகோணம் முன்னாள் நகர பா.ம.க. செயலாளர் பாலகுரு ஆகியோரையும் அதிரடியாக கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணுவிற்கு பல்வேறு வகைகளில் பக்கபலமாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 300 கோடி பணம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.
Follow Us