Skip to main content

கொள்ளையில் ஈடுபடும் ஐந்து நபர்கள்... தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

Five people involved in the robbery

 

விழுப்புரம் அருகே உள்ளது காங்கேயனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி 40 வயது சுரேஷ். இவர் தினசரி அதிகாலை விழுப்புரம் மீன் மார்க்கெட்டுக்குச் சென்று, மீன் வாங்கிக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் கிராமப்புறங்களுக்குச் சென்று விற்பனை செய்துவருகிறார். அதன்படி இவர் மீன் வாங்குவதற்காக நேற்று (19.12.2021) அதிகாலை 3 மணி அளவில் தனது ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது காணை கிராமத்தின் அருகே அய்யனார் கோயில் அருகே மாஸ்க் அணிந்த ஐந்து நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து சுரேஷை வழிமறித்தனர்.

 

தங்களிடமிருந்த கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் மீன் வாங்க வைத்திருந்த மூவாயிரத்து ஐநூறு ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டனர். இதேபோன்று, மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்க வந்துகொண்டிருந்த கோனூரைச் சேர்ந்த மீன் வியாபாரி கந்தன் என்பவரையும் அதே மர்ம நபர்கள் விழுப்புரம் இந்திராநகர் பகுதியில் மடக்கிக் கத்தி காட்டி மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன கந்தன் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு, கொள்ளையர்களிடமிருந்து தப்பி ஓடிவந்துள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதைக் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

இதுகுறித்த தகவல் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ், காணை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களைப் போலீசார் ஆய்வுசெய்துவருகின்றனர். விழுப்புரம் நகரை ஒட்டியுள்ள பகுதியில் மாஸ்க் அணிந்த மர்ம நபர்கள் 5 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் விழுப்புரம் நகரில் வாழும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்