Skip to main content

சேலம் சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை! மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Published on 21/03/2019 | Edited on 22/03/2019


வாழப்பாடி அருகே, பத்து வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்து படுகொலை செய்த வழக்கில், குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை (மார்ச் 21, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

 


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருடைய மகள் பூங்கொடி (10). அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். 

 


கடந்த 2014ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி இரவு, சிறுமி பூங்கொடி தனது பெற்றோர், சகோதரிகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள். மறுநாள் காலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை.

 

bb


பெற்றோர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், சென்றாயன்பாளையம் பெருமாள் மலைக்கரட்டில் உள்ள ஒரு வேப்ப மரத்தில், சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. சிறுமியின் மர்ம உறுப்பிலிருந்து ரத்தம் வழிந்து தோய்ந்து இருந்தது. முகத்தில் நகக்கீறல்கள் இருந்தன. அந்தக் காயத்தின் மீது முகத்திற்கு போடப்படும் பவுடர் வைத்து அடைக்கப்பட்டு இருந்தது. 

 


நெஞ்சை பதற வைத்த இந்த சம்பவம், அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 


இந்த சம்பவம் தொடர்பாக பூங்கொடியின் வீடு அருகே வசிக்கும் பூபதி (36), அதே பகுதியைச் சேர்ந்த ஸ்னேக்பாபு என்கிற ஆனந்த்பாபு (34), ஆனந்தன் (26), பிரபாகரன் (31), பாலு என்கிற பாலகிருஷ்ணன் (330 ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 


இவர்களில் பூபதி, பாமகவை சேர்ந்தவர். அப்போது சென்றாயன்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். கைது நடவடிக்கைக்குப் பிறகு அவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டார்.

 


இந்த சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அப்போது பல்வேறு அமைப்புகள் போராடின. கைதான  நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை நிலவரத்தை, அப்போதைய சேலம் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் கேட்டறிந்தார்.

 


சம்பவத்தன்று இரவு குடிபோதையில் இருந்த இவர்கள் ஐந்து பேரும், பரமசிவத்தின் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை கடத்திச்சென்றுள்ளனர். பூங்கொடி கூச்சல் போட்டு விடாமல் இருக்க அவளது வாயில் துணியை அடைத்துள்ளனர். சம்பவத்தின்போது பரமசிவத்தின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கதவு, பழுது ஏற்பட்டதால் அப்புறப்ப டுத்தப்பட்டு இருந்ததால், சேலை துணியால் வாசலை மறைத்து இருந்தனர். அதனால் துணியை விலக்கிவிட்டு இவர்கள் வீட்டுக்குள் நுழைந்த சந்தடி யாருக்கும் கேட்கவில்லை. 

 


சென்றாயன்பாளையம் பெருமாள் மலைக்கரடு பகுதிக்குச் சிறுமியை கடத்திச்சென்ற அந்த கும்பல், துடிக்க துடிக்க கூட்டு வன்புணர்வு செய்துள்ளது. அப்போது சிறுமியின் முகத்தில் நகக்கீறல்களால் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் சொட்டியதால், அவற்றில் முகத்திற்குப் பூசும் பவுடரைக் கொண்டு அடைத்துள்ளனர். 

 


காமக் கொடூரன்களிடம் சிக்கிக்கொண்ட சிறுமி, அவர்களிடம் இருந்து மீள முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்கிருந்த ஒரு வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு தப்பிச்சென்று விட்டனர். மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

 

bb

 

இந்த வழக்கின் விசாரணை, சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த இரண்டு வழக்கறிஞர்கள் இடையிலேயே மாற்றப்பட்டனர். மூன்றாவதாக ஆஜரான வழக்கறிஞர் தனசேகரன், அரசுத்தரப்பில் ஆஜராகி இறுதி வரை வாதாடினார்.

 


நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் இருதரப்பு வாதங்களும் நடந்து முடிந்தன. இதையடுத்து மார்ச் 19, 2019ம் தேதியன்று, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரங்கள் மார்ச் 21ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

 


அதன்படி, குற்றவாளிகளுக்கு வியாழக்கிழமை தண்டனையின் முழு விவரங்களையும் நீதிபதி விஜயகுமாரி வாசித்தார். குற்றவாளிகள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.


தீர்ப்பின் முழு விவரம்: 


இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 120 பி - கூட்டுச்சதி, 450 - வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், 366 - வன்புணர்வு ஆகிய குற்றங்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

bb

 

பிரிவுகள் 363 - தந்தையிடம் இருந்து குழந்தையை கடத்தல், 201 & தடயங்களை அழித்தல் ஆகிய குற்றங்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும், பிரிவு 404 - இறந்தவரின் உடைமையை கடத்தல் குற்றத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 


மேலும், பிரிவு 302 - கொலை குற்றத்திற்கும், போக்சோ சட்டப்பிரிவு 5 மற்றும் 6ன் கீழும் தலா ஓர் ஆயுள் தண்டனை வீதம் இரட்டை ஆயுள் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு அளித்தார். அதாவது குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 47 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்தார்.

 

இத்தீர்ப்பு குறித்து, சிறுமி பூங்கொடியின் தந்தை பரமசிவத்திடம் கேட்டபோது, ''மகளைக் கொன்றவர்களுக்கு தண்டனை கிடைத்தாலும், என் மகள் என்னைவிட்டுப் போனது போனதுதான். இனி, அவள் திரும்பி வரப்போவதில்லை. நான் சாகும் வரைக்கும் என் மகளின் நினைவுகள் என்னை விட்டு அகலாது. உப்பைத்தின்றவன்  தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். அவர்கள் செய்த பாவம் அவர்களை சும்மா விடாது. ஒரு உயிரின் வலியை நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட இந்த கொடுமை வேறு யாருக்குமே ஏற்படக்கூடாது,'' என்று கண்ணீர் சிந்தினார். 

 


தண்டனை விவரங்களை கேட்டதும், நீதிமன்றத்தில் கூடியிருந்த குற்றவாளிகளின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். கூச்சல் போட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''பத்து வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்கில் ஆயுள் தண்டனை மட்டுமே கொடுத்திருப்பதில் முழு திருப்தி இல்லை. தூக்கு தண்டனைதான் கொடுத்திருக்க வேண்டும்,'' என்றனர்.

 

சார்ந்த செய்திகள்