me

மேட்டூர் அருகே ரெட்டியூர் காவிரி ஆற்றில் மூழ்கி உறவினர்கள் 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.

Advertisment

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய உறவினரான கோபால், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ரெட்டியூரில் வசிக்கிறார். விடுமுறை தினமான இன்று (ஜூலை 22, 2018) சரவணன் தனது குடும்பத்தினருடன் இன்று ரெட்டியூருக்கு வந்திருந்தார்.

Advertisment

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக பாய்ந்து செல்வதைப் பார்த்ததும் ஆற்றில் இறங்கி குளிக்க விரும்பினர்.

இன்று காலை சரவணனும், அவருடைய குடும்பத்தினரும் ரெட்டியூர் ஆற்றில் இறங்கி குளித்தனர். ஆற்றில் இறங்கிய சிறிது நேரத்தில் நீர்ச்சுழலில் சிக்கி அவர்கள் மூழ்கினர். இதையறிந்த அங்கிருந்த சில மீனவர்களும், பொதுமக்களும் ஆற்றுக்குள் குதித்து அவர்களை மீட்க போராடினர். இதில் தனுஸ்ரீ என்ற கல்லூரி மாணவி மட்டும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Advertisment

மற்றவர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியாத நிலையில் தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் ஆகியோர் தீவிரமாக தேடினர். இதையடுத்து இன்று மதியம் சரவணன், வானுஸ்ரீ, மைதிலி, ஹரிஹரன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். உறவினர் மகளான ரவீனா மட்டும் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து, காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அதையும் மீறி ஆற்றில் குளிக்கச் சென்ற உறவினர்கள் நீர்ச்சுழலில் சிக்கி பலியான சம்பவம் ரெட்டியூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.