/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1202.jpg)
சட்டமன்றத் தேர்தல், கரோனா இரண்டாம் அலை ஆகியவற்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 11,741 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு ஜூலை 26ஆம் தேதிமுதல் உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உள்ளூர் காவல் நிலையங்கள், ஆயுதப்படைகளில் காலியாக உள்ள 3,784 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள், சிறப்பு காவல்படையில் 6,545, சிறைத்துறையில் 119, தீயணைப்புத்துறையில் 1,311 என மொத்தம் 11,741 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப். 17ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதையடுத்து அக்டோபர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்குள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், கரோனா இரண்டாவது அலை உள்ளிட்ட காரணங்களால் இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அத்தேர்வை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 மாநகரக் காவல்துறை, 29 மாவட்டக் காவல்துறை, 5 சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை மைதானங்களில் வரும் 26ஆம் தேதிமுதல் உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து 5 நாட்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்க, மாநகர, மாவட்டக் காவல்துறை உயரதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சீமா அகர்வால் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)