ADVERTISEMENT

சாலையில் தேங்கிய தண்ணீரில் மீன்பிடித்து, நாற்று நட்டு போராட்டம்; அமைச்சர் தொகுதியின் அவலம்!

10:16 PM Jan 11, 2021 | kalaimohan

ADVERTISEMENT

அமைச்சர் காமராஜின் தொகுதியில் உள்ள பூந்தோட்டம் கிராமத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, தெருவில் தேங்கியிருந்த தண்ணீரில் மீன் பிடித்தும், நாற்று நடவு செய்தும், பாடை கட்டி தூக்கிச் சென்றும் நூதனமான முறையில் பொதுமக்கள் போராட்டம் செய்துவருகின்றனர் .

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பூந்தோட்டம் புதுத்தெரு கிராமத்தில், சுமார் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அப்பகுதி மக்கள் 20 வருடங்களுக்கு மேலாக தரமான சாலை வசதி செய்துதர வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். லேசாக மழை பெய்தாலே சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி குளம்போல் தண்ணீர் தேங்கிவிடும் நிலையே இருந்துவருகிறது.

இது குறித்து வலங்கைமான் வட்டாட்சியர், வட்டார ஊராட்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் என அதிகாரிகள் பலரிடமும் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.

இந்தச் சூழலில் இன்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சாலையை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி சாலையில் நாற்று நட்டும், தெருவில் தேங்கியுள்ள தண்ணீரில் மீன்பிடித்தும், பாடை கட்டி தோளில் சுமந்து தண்ணீரில் கடந்து சென்றும் நூதனமுறையில் போராட்டம் செய்தனர்.

ஊர்வலமாகச் சென்ற மக்கள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அதோடு கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கொட்டும் மழையிலும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

''இதற்கு மேலும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வரும் தேர்தலில் அமைச்சர் காமராஜுக்கு எதிராகப் போராட்டம் செய்து சரியான பாடம் புகட்டுவோம்" என்கிறார்கள் வாலிபர் சங்கத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT