
முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டிய தனிப் பிரிவு போலீஸாரின் அலட்சியத்தால் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன்பிடித் திருவிழா அமோகமாக நடைபெற்றதால் நோய் தொற்று அச்சத்தில் உள்ளனர் ஒரு ஊர் மக்கள்.
மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் ஆடி மாதங்களில் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், கீழவிளாத்திகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊர் பெரியவர் வலைவீசி துவக்கி வைக்க, ஏறக்குறைய நூற்றுக்கும் அதிகமானோர் கண்மாயில் இறங்கி மீன் பிடிக்க ஆரம்பித்தனர்.

கரோனா பெருந்தொற்று அச்சத்தால் ஊரடங்கு விதிகள் அமலில் இருக்க, இது எவ்வாறு நடைபெற்றது? யார் அனுமதி கொடுத்தது.? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் இதுகுறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்கிறது உள்ளூர் காவல் நிலையம்.
"ஏதாவது நிகழ்வு நடைபெறுமுன் அதுகுறித்த முன் தகவலை தங்களுடைய மேலதிகாரிகளுக்கு தெரிவித்து அலர்ட் செய்யும் தனிப்பிரிவு காவலர்கள் மீன்பிடித் திருவிழா குறித்து அலட்சியமாக இருந்துள்ளனர். இதனால் கரோனா பெருந் தொற்று அச்சம் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக" பகிர்கின்றனர் அருகில் உள்ள கிராம மக்கள்.
படங்கள்: விவேக்