Skip to main content

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவர்; மாவட்ட ஆட்சியரகத்தில் குடியேறியதால் பரபரப்பு

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

fishermen who were kept away from the town struggle at the district collector's office

 

“மூன்று ஆண்டுகளுக்கு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட எங்களை இன்னும் ஊரோடு சேர்த்துக்கல, உறவுகளோடு அன்னம் தண்ணி புழங்க முடியல” என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் குடியேறி சமைத்துச் சாப்பிட முயன்ற மீனவர் மற்றும் அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்தவர் மீனவர் லெட்சுமணன். வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தங்கி மீன்பிடித்து வந்தார். பூம்புகாரில் உள்ள மீனவர்கள், வெளியூர் சென்று மீன் பிடிக்கக்கூடாது என கிராம பஞ்சாயத்தார் ஊர் கட்டுப்பாடு விதித்திருந்தனர். ஆனால் லெட்சுமணன் குடும்பத்தினர் பிழைப்பிற்காக ஊர் கட்டுப்பாட்டை மீறி வெளியூரில் தங்கி மீன்பிடித்து வந்ததாக, ஊர் கட்டுப்பாட்டை மீறியதாகக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 20 லட்சம் அபராதம் விதித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் ஊரில் உள்ள யாரும் இவர்கள் குடும்பத்துடன் ஒட்டோ உறவோ வைத்துக்கொள்ளக்கூடாது, அப்படி மீறி பேசுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா போட்டு அறிவித்துவிட்டனர்.

 

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து லெட்சுமணனும், அவரது குடும்பத்தினரும் ஆரம்பத்தில் நாகை ஆட்சியர், தற்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் என அதிகாரமுள்ள அனைவரிடமும் புகார் அளித்து நீதி கேட்டனர்.

 

“அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ எங்களின் நிலைமை அறிந்து இரக்கம் காட்டவில்லை, மூன்று ஆண்டுகளைக் கடந்தும் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். எவ்வித நியாயமும் கிடைக்கல, நடவடிக்கை எடுக்காததால் வருமானத்திற்கு வழி இன்றி குடும்பத்துடன் தவித்து வருகிறோம். உறவுகள் இருந்தும் ஊர் கட்டுப்பாடு என்கிற பெயரில் ஆதரவற்ற அனாதைகளாகத் தவிக்கிறோம். உறவுகளோடு அன்னம் தண்ணி புழங்க முடியல, நல்லது கெட்டதுல கலந்துக்க முடியல, இருப்பதை விட செத்துடலாம்னு தோனுது” என்று கலங்குகின்றனர் லெட்சுமணனின் மகனும், அவரது மனைவியும்.

 

fishermen who were kept away from the town struggle at the district collector's office

 

கடந்த வாரம் நடந்த மனுநீதி முகாமில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லெட்சுமணனும் அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் மருமகள்கள் பேரக்குழந்தைகள் என்று எட்டு பேர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் இரண்டு நாளில் பிரச்சனையை பேசித் தீர்ப்பதாக உறுதி அளித்திருந்தனர். ஒரு வாரம் கழிந்த நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

 

இந்தநிலையில் தான் மீனவர் லெட்சுமணனின் மகன் வினோத்தும் அவரது மனைவி குணவதியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக் கொடி கம்பத்தின் கீழே ஸ்டவ் அடுப்பு வைத்து சமையல் செய்தனர். அங்கு வந்த காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு அவர்கள் உடன்படாததால் அவர்களது அடுப்பை அணைத்து வலுக்கட்டாயமாக இருவரையும் வெளியேற்றினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.