Skip to main content

சட்டத்தை மீறிய மீனவர்கள்.. மானியத்தை ரத்து செய்த அதிகாரிகள் 

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

Fishermen violating the law .. Authorities canceling subsidies

 

கடலூர் மாவட்ட கடல் பகுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி, படகுகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக கடலூர் மாவட்ட மீன்வளத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சின்னகுப்பன் தலைமையில், ஆய்வாளர் மணிகண்டன், கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் இதர அலுவலர்கள் நேற்று (24.08.2021) ரோந்து பணி மேற்கொண்டனர். ரோந்துப்பணியின்போது புதுச்சேரி மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்கள் பிடிப்பது தெரிந்தது.

 

அதையடுத்து சுருக்குமடி படகுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றபோது சுமார் 30 சுருக்குமடி படகுகளில் வந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு பணிசெய்ய விடாமல் தடுத்ததோடு, மிரட்டல் விடுத்தனர். எனினும் எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், அனைத்து சுருக்குமடி வலை படகுகளையும் கடலூர் மாவட்ட கடல் பகுதியிலிருந்து திருப்பி அனுப்பினர். 

 

இதுபோன்று புதுச்சேரி படகுகள் கடலூர் பகுதிகளில் சுருக்குமடி வலைகொண்டு  மீன்பிடிப்பு செய்வதால் கடலூர் மீனவ கிராமங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை எழும் நிலை உள்ளது. இதனால் இரு மாநில அரசுகளும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதேபோல் நேற்று முன்தினம் மீன்வளத்துறை அதிகாரிகள், காவல்துறையினருடன் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடித்துவந்த படகுகளை ஆய்வுசெய்தனர். தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை மீறி சோனாங்குப்பத்தைச் சேர்ந்த சாரிதரன் என்பவரது படகில் 40 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணியளவு பயன்படுத்தி மீன் பிடித்துவந்தது தெரியவந்ததால், வலை மற்றும் பிடித்து வரப்பட்ட மீன்களைப் பறிமுதல் செய்ததுடன், அவர் மீது வழக்குப் பதிந்து, அரசால் மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருளை தடை செய்து உத்தரவிட்டனர்.

 

இதேபோல், கடல்சார் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட விதிமுறைகளை மீறி கடலூர் மாவட்டத்தில் விசைப்படகுகள் செயல்படுவதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி மீன்வளத்துறை பிறப்பித்த உத்தரவை தவறாது கடைப்பிடிக்குமாறு கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் மீனவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி கடல்சார் மீன்பிடித் தொழில் சம்பந்தமாக விசைப்படகுகள் மூலம் மீன் பிடிப்போர் காலை 5 மணிக்கு தங்கு தளத்திலிருந்து புறப்பட்டு கடலில் மீன்களைப் பிடித்துக்கொண்டு மாலை 6.00 மணிக்குள் தங்குதளத்திற்கு வந்துவிட வேண்டும் என சட்ட விதிமுறைகளைக் குறிப்பிட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 21.8.2021 அன்று இரவு 10.30 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 3 மணிவரை கடலில் மீன் பிடித்துக்கொண்டு தங்குதளத்திற்கு திரும்பிய 4 படகுகளைக் கண்காணிப்பு பணியில் இருந்த கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணைக் காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் ஆகியோர் மடக்கிப்பிடித்து, மீன்வளத் துறை அதிகாரிகளை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் விதிமுறைகளை மீறிய படகின் உரிமையாளர்களான கமால், பிரசாத், மூர்த்தி, சீதாராமன் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, படகுகளுக்கு அரசால் மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருளை தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.