ADVERTISEMENT

‘தேர்தலை புறக்கணிக்கப்போகிறோம்’ - தொடர் போராட்டம் அறிவித்துள்ள மீனவ மக்கள்!

03:41 PM Apr 03, 2024 | mathi23

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி அடுத்துள்ள கீழ மூவர்க்கரை மீனவகிராம மக்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து தேர்தலைப் புறக்கணித்து கடலில் இறங்கி போராட்டம் ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழ மூவக்கரை மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கீழமூவர்கரை மீனவர் கிராமத்தில் அடிப்படை வசதிகளான ரேஷன் கடை, சமுதாயக்கூடம், மீன் ஏல கூடம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை என குறைகளைகூறி கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த போராட்டத்தில் உள்ள அந்த மக்கள் கூறுகையில், “கடலில் தூண்டில் வளைவு அமைத்துத் தரவேண்டும் என கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரை எந்த அரசும் செவிகொடுத்து கேட்கவில்லை. மேலும், ஒவ்வொரு முறையும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டுமே வருகின்றனர். வெற்றி பெற்ற பின்பு கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை. அதனால், பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்பதாக ஒருமனதாக முடிவெடுத்து போஸ்டர் அடித்து சுற்றுவட்டார கிராமங்களில் ஓட்டி ஆதரவு கேட்டுள்ளோம்” என்கின்றனர்.

இந்நிலையில், இன்று (03-04-24) மீனவர் கிராம தலைவர் தலைமையில் கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அதில் முதல் கட்டமாக நாளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடலில் இறங்கி கையில் கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், வரும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணித்து அனைவரும் வாக்களிக்காமல் தங்களது வீட்டிலேயே இருக்கப் போவதாகவும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட ஆயுத்தம் ஆகி வருவதால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT