Skip to main content

சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர்கள் உயிரிழப்பு!

Published on 07/02/2021 | Edited on 07/02/2021

 

Fishermen boat capsize near Chidambaram

 

சிதம்பரம் அருகே முடசல் ஓடை பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமான படகில் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சிங்கார குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அப்பு( 40), எம்ஜிஆர் திட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன்( 60), வீரத்தமிழன்(50), தமிழன் (52) ஆகிய நான்கு நபர்களும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

 

இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டு கரை திரும்பும் போது வெள்ளாற்று முகத்துவாரம் அருகே வரும் போது அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு கவிழ்ந்துள்ளது. இதில் அப்பு, குணசேகரன் ஆகிய இருவர் தப்பித்து கரை சேர்ந்தனர். மற்ற நபர்களான வீர தமிழன், தமிழன் ஆகிய இருவரும் காணமல் போனநிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்றது.

 

இந்நிலையில் இன்று அதிகாலை இருவரது உடலும் சடலமாக கரை ஒதுங்கியது. இதனைத் தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிள்ளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.

 

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.