fisherman's cuddalore district collector instruction

மீன்பிடி தடைக்காலம் நாளையுடன்(மே 31) முடிவுக்கு வருகிறது. அதையடுத்து ஜூன் 01- ஆம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்ட மீனவர்கள் மகிழ்ச்சியடைந்து, கடலுக்கு செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

Advertisment

Advertisment

இதனிடையே கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- "தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் அரசு ஆணையின்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைபயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை மூலம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைசேர்ந்த சில மீனவ கிராமத்தினர் 240 குதிரை திறனுக்கு அதிகமான திறன் கொண்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் மூலம் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதை மீன்பிடி உரிமையாளர்கள் கைவிட வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட வலையை, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் தொடர் நடவடிக்கைக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து பயன்படுத்தி வரும் மீனவ கிராமத்தினர் மற்றும் சுருக்குமடி மீன்பிடி படகு உரிமையாளர்கள் உடனடியாக சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

கடலூர் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம், சிறுதொழில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தவும், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கடல்வளத்தை பேணிப் பாதுகாப்பதற்கும், ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் சுருக்குமடி தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, கடலூர் மாவட்ட கடல் பகுதிகளும் மீனவ கிராமங்களிலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் அரசால் அனுமதிக்கப்பட்ட சுமூகமான மீன்பிடிப்பு முறைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இவற்றை மீறி யாரேனும் கடலூர் மாவட்ட கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் மற்றும் அதிவேகத் திறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்த முயன்றாலோ அல்லது பயன்படுத்தினாலோஉடனடியாக தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவ்வாறு மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் மீன்வளத்துறை மூலம் பெறப்படும் நலத் திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்". இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.