புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (30.07.2025) 207 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதில் கோட்டைப்பட்டினம் சலீம்கான் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மூர்த்தி, பிரபு, அலெக்ஸ், அசாருதீன் ஆகியோர் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அதன்படி மீனவர்கள் நடுக்கடலில் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையைக் கட்டி வைத்திருந்த கயிறு அறுந்து உருளை வேகமாகச் சுற்றியது. இதனால் உருளையைச் சுழற்றும் இரும்பு ராடு வேகமாகச் சுற்றும் போது அதனை மூர்த்தி நிறுத்த முயன்றார். இந்நிலையில் தான் இரும்பு ராடு மூர்த்தி மீது தாக்கி கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த சக மீனவர்கள் மூர்த்தியை மீட்டனர். அப்போது மூர்ச்சையாகியிருந்தார். இதனையடுத்து உடனே கரைக்குத் திரும்பி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பார்த்த போது மீனவர் மூர்த்தி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.