Skip to main content

கர்நாடக வனத்துறையால் உயிரிழந்த மீனவர்; உடலைப் பெற்றுக்கொள்ள ஒப்புதல்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

Fisherman fired by Karnataka forest department; Negotiating to get the body

 

கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழக கர்நாடக எல்லையில் கடந்த 14 ஆம் தேதி பரிசலில் சென்ற சிலர் கர்நாடக வனப்பகுதியில் வேட்டையாடினர் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த வனத்துறையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டினைத் தொடர்ந்து கோவிந்தபாடியைச் சேர்ந்த மீனவர் காரவடையான் என்பவரைக் காணவில்லை. இதனைத் தொடர்ந்து காரவடையானை உறவினர்கள் தேடி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை பாலாற்றங்கரையில் சொறிபாறையில் காரவடையான் உடல் கண்டெடுக்கப்பட்டது.

 

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதால் தான் காரவடையான் உயிரிழந்ததாக மக்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும் பிரேத பரிசோதனை செய்தால் உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி காரவடையான் உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு கர்நாடகத்திடம் இருந்து 50 லட்ச ரூபாய் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும். இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மக்கள் போராட்டம் நடத்தினர். 

 

இந்நிலையில் இன்று காலை மீனவரின் உடலைப் பெற்றுக்கொள்ள போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பயணியர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட எஸ்.பி. சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேசுவார்த்தையில் உறவினர்கள் சில நிபந்தனைகள் விதித்தனர். அதில் பிரேதப் பரிசோதனை செய்வதை காணொலியாக பதிவு செய்ய வேண்டும். மேலும் பிரேதப் பரிசோதனை செய்யும் போது எங்கள் மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் எனக் கோரி இருந்தனர். இதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்த நிலையில் உடலைப் பெறுவதற்காக தற்போது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து உறவினர்கள் பிரேதப் பரிசோதனைக்காக கையெழுத்து இட்டவுடன் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்