Fisher jumped into river

கடலூர் தாழங்குடா கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி மீனவர் மதிவாணன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதையடுத்து படகுகள், மீன்பிடி வலைகள், வீடுகள் ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. மோட்டார் சைக்கிள்கள், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுபற்றிய புகாரின்பேரில் கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதிவாணனை கொலை செய்ததாக 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து 15 பேரை கைது செய்தனர். அதில் 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் படகுகளை தீவைத்துக் கொளுத்தியது தொடர்பாக 53 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து 45 பேரை கைது செய்தனர். அதில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சமாதானம் பேச்சுவார்த்தைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாகவும், அதில் தாழங்குடா கிராம மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும் நேற்று மதியம் முதல் வீடு வீடாக சென்று கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் கூறியுள்ளனர்.விடுபட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு மாலையில் சென்று போலீசார் கூறி வந்தனர். அப்போது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் போலீசாரை பார்த்ததும் பயந்து ஓடினார். அதை பார்த்து போலீசாரும் அவரை துரத்தியுள்ளனர். அப்போது தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வேர்ல்டு விஷன் தெருவை சேர்ந்த குப்புராஜ்(50), குமார் ஆகிய 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் துரத்தி வருவதாக கூறிக்கொண்டே சுப்பிரமணி ஓடியுள்ளார். இதனைப் பார்த்த குமாரும், சுப்புராஜும் அவருடன் சேர்ந்து ஓடினார்கள். இதையடுத்து 3 பேரும் ஆற்றில் குதித்தனர். அதில் சுப்பிரமணி, குமார் இருவரும் ஆற்றை கடந்து அக்கரைக்குச் சென்றுவிட, அவர்களுடன் ஆற்றில் குதித்த குப்புராஜ் மட்டும் காணவில்லை.

இதுபற்றி தகவலறிந்ததும் கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன், துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி மற்றும் தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடியதில் குப்புராஜ் பிணமாக மீட்கப்பட்டார்.

Advertisment

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலீசார் துரத்தியதால்தான் குப்புராஜ் ஆற்றில் குதித்து இறந்து விட்டார். அதனால் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி குப்புராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் வட்டாட்சியர் செல்வக்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ஆனாலும் மீனவர்கள், உறவினர்கள் குப்புராஜின் சடலத்தை வாங்காமல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.